இலங்கை அரசின் போக்கு குறித்து இந்தியா அதிருப்தி: ப.சிதம்பரம் தெரிவிப்பு

இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் இலங்கை அரசு மெத்தனமாக இருக்கிறது என்றும், தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் எடுத்துவரும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றும், திருப்தியளிக்கவில்லை என்றும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களின் நலன்கள் தொடர்பில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில்,

உள்நாட்டிலேயே அகதிகளாக இருப்பவர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு 500 கோடி ரூபாயை வழங்கியுள்ளது என்றும், தேவைப்பட்டால் மேலும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த அவர், ஆனால் இலங்கை அரசு அவர்களின் மறுவாழ்வு தொடர்பான திட்டத்தை தயாரிக்காமல் இருப்பது இந்தியாவுக்கு அதிருப்தி அளிக்கிறது என்றும் கூறுகிறார்.

அகதிகளின் முகாம்களை பார்வையிட ஊடகங்களையும், இதர அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் இலங்கை அரசை கோரியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியாவின் கவலைகளை அண்மையில் இந்தியா வந்திருந்த இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவினரிடம் தெரிவித்துள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் தமிழர் பகுதிகளில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைத் தரப்பில் எங்களுக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என வற்புறுத்தப்படமாட்டார்கள். அவர்களாக விரும்பினால், அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இலங்கைத் தமிழர்களைக் காக்க இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. நாங்கள் இலங்கை அரசிடமும், விடுதலைப் புலிகளுடனும் பேசினோம். இரு தரப்புமே நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை.

இலங்கைக் கடற்படையினரால் நடுக் கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.