வணங்காமண்” தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யமுடியாது

இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த “வணங்காமண்” கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் “இன்னர் சிற்றி பிரஸ்” எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக அதன் நிருபர் மத்தியூ ரஸல்லீ தனது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

“வணங்காமண்” கப்பல் தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்வதற்கு இல்லை என்று குறிப்பிட்ட ஜோன் ஹோம்ஸ் ஆயினும் கப்பலிலிருந்து பொருட்கள் இந்தியாவில் இறக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக தான் கேள்விப்பட்டதாக கூறியிருக்கிறார். இதுவரை அது இடம்பெறவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டிருக்கிறது.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் தொடர்பாக ஏதாவது பிந்திய விபரம் உள்ளதா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோது “இல்லை’ என்று ஹோம்ஸ் கூறியுள்ளார். தன்னார்வ தொண்டர் நிறுவனப் பணிப்பாளர் 17 பேர் படுகொலை உட்பட உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருந்த ஆணைக்குழு கலைக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஹோம்ஸ்; “கலைக்கப்பட்டமை தொடர்பாக ஐ.நா. வுக்கு உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை’ என்றும் அறிவித்தல் கிடைத்ததும் இந்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. வின் பணியாளர் தொடர்பாக கேட்கப்பட்டபோது; அது தொடர்பாக ஐ.நா. கேள்வி எழுப்பியிருப்பதாக ஹோம்ஸ் கூறியுள்ளார். அவர்களுக்குச் சிறப்புரிமை இல்லையா என்று கேட்கப்பட்டபோது; சர்வதேசப் பணியாளருக்கு மட்டுமே என்று ஹோம்ஸ் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜூன் 26 இல் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நாள் முழுக்க பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பாக உரைகள் இடம்பெற்றதாக இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

இலங்கை தொடர்பாக தனது ஆரம்பகட்ட உரையில் ஐ.நா. வின் உயர்மட்ட மனிதாபிமான விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரியான ஜோன் ஹோம்ஸ் அதிகளவுக்கு கருத்துத் தெரிவிக்கவில்லை என்று தோன்றுவதாகவும் இறுதியில் இலங்கையில் ஆயுதங்கள் மௌனித்துவிட்டன என்று குறிப்பிட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Source & Thanks : sankathi

Leave a Reply

Your email address will not be published.