வவுனியா அகதிகளைப் பராமரிக்க போதியளவு நிதி இல்லை;அடுத்த மாதத்தில் உணவு வழங்குவதே கஷ்டம்: ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கை

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்குத் தம்மிடம் போதியளவு நிதி ஒதுக்கீடு இல்லை என்றும், இதனால், அடுத்தமாதத்தில் அகதிகளுக்கு உணவு வழங்குவது கூட பெரும் சிக்கலாக இருக்கப் போகின்றது என்றும் ஐ.நா. சபையின் மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்திருக்கின்றன.

இடம்பெயர்ந்தவர்களுக்கான நீண்டகாலத் திட்டம் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் வரை நிதி உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்க உதவி நிறுவனங்கள் மறுத்துவிட்டன என்றும் ஐ.நா. அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வவுனியாவில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல மனிதாபிமான அமைப்புகள் தாங்கள் அமைத்த கூடாரங்களை ஆரம்பத்தில் மூன்று மாதத்துக்கே பராமரிப்பதற்கு இணங்கின. அந்தக் காலப்பகுதி தற்போது முடிவடைகின்றது. தொடர்ந்தும் அகதிகளைப் பராமரிப்பதற்கு அந்த அமைப்புகளிடம் நிதிவசதியில்லை என ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீண்டகாலத்திட்டம் முன்வைக்கப்படவில்லை

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக நீண்டகாலத் திட்டமொன்று முன்வைக்கப்படும் வரை மூன்று மாதங்களுக்கு மேல் நிதியுதவி வழங்குவது குறித்து உறுதி மொழிகளை அளிக்க இந்த அமைப்புகள் தயங்குகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தொடர்பாக ஐ.நா. அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

வவுனியாவில் மனிதாபிமான அமைப்புகளுக்கான அனுமதி வழங்கப்படுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதும் தாமதம் செய்யப்படுவதும் தொடர்வதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ஓமந்தைக்கு அப்பால் செல்வதற்கு தொடர்ந்தும் மனிதாபிமான அமைப்புகள் அனுமதி கோரி வருகின்றன. அடுத்த மாதம் இப்பகுதியில் மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளது.
மக்கள் ஒரே இடத்தில் பெருமளவில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையை மாற்ற முயற்சிகள் இடம்பெறுகின்றன.

தகுதிவாய்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனையின் பின்னர், 80 ஏக்கரில் ஆயிரத்து 200 கூடாரங்களைக் கொண்டதாக முகாம் அமையவேண்டும் என இணக்கம் காணப்பட்டுள்ளது.

முகாம்களில் தீ அபாயம் குறித்து எச்சரிக்கை

வீரபுரம் மற்றும் சுமதிபுரம் முகாம்களில் தீ அபாயம் குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் மருத்துவ வசதிகள் போதியளவு இல்லை. அவசர நோயாளர்களைக் கொண்டுசெல்ல வாகனங்கள் இல்லை.

இடம்பெயர்ந்தவர்கள் மத்தியிலான முக்கிய தொற்றுநோயாக சின்னமுத்து மற்றும் வாந்திபேதி காணப்படுகிறது.

இது தவிர சுவாசப் பிரச்சினைகள், தோல் வியாதி மற்றும் தொற்றுக்காய்ச்சல் என்பன காணப்படுகின்றன.

போதியளவு வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ள போதிலும் வைத்திய நிபுணர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் அதிகரிப்பதால் மேலதிக பணியாளர்கள் தேவை.

போதியளவு குடிதண்ணீர் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக் குறித்து ஆராயப்படுகின்றது.

ஜூலை மாதத்துக்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்குவதற்குத் தேவையான நிதி வசதியின்மை குறித்து உணவு விநியோகத்துடன் தொடர்புபட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களுக்கென பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், அங்கு செல்வதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.