தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் குண்டுவீசி படுகொலை; ரவுடி கும்பல் தாக்குதல்

வண்டலூர் அருகே ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் நாகரத்தினம் என்ற ஜி.என்.ஆர்.குமார் (50). கிளாம்பாக்கத்தில் வசித்து வந்தார். காட்டாங் கொளத்தூர் தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளராகவும், காஞ்சி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார்.

இவர் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையிலும் நடைபயிற்சி சென்றார். காரணை-புதுச்சேரி கூட்டு ரோட்டில் சென்ற போது 2 கார்களில் வந்த கும்பல் குமாரை வழிமறித்தது. அவர் மீது திடீரென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள்.

வெடிகுண்டு வீச்சில் குமார் தலை சிதறி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். உடனே கொலை கும்பல் கார்களில் ஏறி தப்பி சென்றது.

கொலை நடந்த இடம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட குமாருக்கு மீராபாய் என்ற மனைவியும், 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதனால் எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். அரசியல் செல்வாக்கால் எதிர்ப்புகளை சமாளித்து வந்தார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவியாக இருந்த மேனகா பஞ்சாயத்து அலுவலகத்திலேயே வெட்டி கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட குமார் பின்னர் விடுதலையானார்.

ஊரப்பாக்கம் பகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம், சங்கர் ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களுடனும் குமாருக்கு தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு சங்கர், சண்முகம் இருவரும் கூலிப்படையுடன் குமாரை தீர்த்துக்கட்ட சுற்றிக் கொண்டிருந்தனர். இதுபற்றி குமார் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இதற்கிடையே ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் பாலாஜியை கொன்றதாக குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன்னை சுற்றி பகை வளர்ந்ததால் எந்த நேரமும் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பயந்து அடியாட்களுடன் வலம் வந்தார். தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியும் வைத்து இருந்தார்.

ஆனால் இன்று தனியாக நடந்து சென்ற போது அவரை எதிரிகள் குண்டு வீசி கொன்று விட்டனர். இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்று மர்மமாக உள்ளது. குமாரின் எதிரிகள் கூலிப்படை வைத்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க செங்கல்பட்டு டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.