ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை-அழகிரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி வந்த அழகிரி அங்கு தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகையில்,

முதன்முதலில் நான் தென்மண்டல அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடிக்குத் தான் வந்தேன். அப்போது என்னிடம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை திமுக வசமாக்கி உள்ளீர்கள்.

நான் இந்த மேடைக்கு பேச வந்ததும் ஒருவர் பெயரை சொன்னால் ஒரு பக்கத்தில் இருந்தும், மற்றொருவர் பெயரை சொன்னால் இன்னொரு பக்கத்தில் இருந்து கோஷ்டியாக கைதட்டுகின்றனர். இந்த கோஷ்டி அரசியல் நல்லதல்ல.

இந்த கோஷ்டி மோதலுக்கு யார் காரணமோ அவர்களை தலைமையிடம் சொல்லி கழகத்தை விட்டு தூக்கி எறிவேன். அவர்கள் குறித்து தலைமையிடம் சொல்வேன். தலைமை இருவரையும் அழைத்து பேசிய பிறகும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

தூத்துக்குடி ஸ்பிக் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் இங்கு ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். ஸ்பிக் ஆலையைத் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இது தொடர்பாக நிச்சயம் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் தனது உறவினரின் திருமணத்தில் பங்கேற்ற அழகிரி பேசுகையில்,

ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தையா டெல்லியில் என்னை சந்தித்து பேசினார். நான் பதவியேற்றதும் முதன் முதலாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஸ்பிக் நிறுவனத்தைத் திறக்க உதவி செய்யுமாறு வலியுறுத்தினேன். பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சில குறிப்புகளை கொடுத்துள்ளேன். நிச்சயமாக ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அழகிரி நினைத்தால் அது முடியும் என்று நீங்கள சொல்கிறீர்கள். அதையே தான் நானும் நினைக்கிறேன். சொன்னதை செய்து முடிப்பேன்.

அடித்தள மக்களின் அடிப்படை தேவைகளை கிளைச் செயலாளர்கள் அறிந்து மாவட்ட கலெக்டரிடமோ, மாவட்டச் செயலாளரிடமோ தெரிவித்தால் அதையும் நிறைவேற்றி தர முயல்வேன் என்றார்.

அழகிரியை சந்திக்க குவியும் மக்கள்…

சமீபகாலமாக மதுரை சத்யசாய் நகரில் உள்ள அழகிரியி்ன் வீட்டில் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்களும் மனுக்களுடன் குவிந்து வருகின்றனர்.

சமீபத்தில் விருதுநகர் சம்சியாபுரத்தை சேர்ந்த உமையர் என்பவர் அழகிரியிடம் முதியோர் உதவித் தொகை கேட்டு மனு கொடுத்தார். அவர் தனது ஊருக்குப் போய்ச் சேர்ந்தபோது வீட்டில் முதியோர் உதவித் தொகை வழங்க விருதுநகர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் காத்துக் கொண்டிருந்தனர்.

அதே போல டெல்லியில் அழகிரியை சந்தித்த சென்னையைச் சேர்ந்த எல்ப்ஸ்ராணி என்ற பெண், தான் ஒரு கபடி வீராங்கனை என்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் கபடி மையத்தில் பயிற்சியாளராக தன்னை சேர்க்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க,

அதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லின் கவனத்துக்கு கொண்டு சென்றார் அழகிரி. இதைத்தொடர்ந்து எல்ப்ஸ்ராணி உடனடியாக பயிற்சியாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் திருக்குவளையில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு சென்ற அழகிரியிடம் வறுமையில் வாடும் திமுக உறுப்பினர் ஒருவர் அழகிரியை சந்தித்து, தன் மகள் பிளஸ்2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி அவருக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருமாறு கேட்க, காரைக்காலில் உள்ள விநாயகா மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அந்த மாணவிக்கு சீட் வாங்கித் தந்தார்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் சரியாக பணிக்கு வருவதில்லை என்று புகார் தரப்பட, சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு பேசிய அழகிரி அந்த டாக்டரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டுத் தான் மதுரை திரும்பியுள்ளார்.

இதில் அழகிரி கட்சி பாகுபாடு பார்ப்பதில்லை என்பது தான் ஹைலைட்.

பரவாயில்லையே.. அழகிரி!.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.