சரியான அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படா விட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் – திஸ்ஸ விதாரண

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்காத பட்சத்தில் மீண்டுமு; ஆயுத போராட்டம் வெடிப்பதனை தடுக்க முடியாதென அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் இழைத்த தவறுகள் காரணமாக எமது நாடு துன்பங்களை அனுபவித்துள்ளது.

யுத்தத்தில் ஈட்டிய வெற்றியின் மூலம் பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் நாம் தோற்கடித்துள்ளோம். அதற்கு அப்பால் உன்மையான பிரச்சினை ஒன்று உள்ளது. அதற்குரிய தீர்வு காணப்படவேண்டும் என தெளிவாக விளங்கிக் கொண்டு அந்த தீர்வினை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரியான முறையில் அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படாத பட்சத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய அபாயமிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிக் குழுவின் நடவடிக்கைகளை விரைவாக நிறைவேற்ற சகலவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ் அனைத்து கட்சிக் குழு பிரதிநிதிகள் குழுவை கடுமையாக விமர்சித்திருந்ததுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரணவையும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

எவ்வாறெனினும் அனைத்து கட்சி குழுவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் தமிழர் பிரச்சினைக்கு இதன் ஊடாக காத்திரமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் எனவும் அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

Source & Thsanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.