இடம்பெயர்ந்தோரின் தொகை 2 லட்சத்து 85 ஆயிரத்து 18 ஆக உயர்வு

வன்னிப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களின் தொகை 2 லட்சத்து, 85 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளதாகப் பிந்திய புள்ளிவிபரத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகின்ற கணக்கெடுப்பின் மூலமே இந்த எண்ணிக்கை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 948 பேரும், யாழ் மாவட்டத்தில் 11 ஆயிரத்த 69 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 6697 பேரும், மன்னார் மாவட்டத்தில் 434 பேரும் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், பல்வேறு வைத்தியசாலைகளில் 4870 பேர் வைத்திய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தப் புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 3054 பேர் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து உறவினர்களிடம் சென்று வசிப்பதற்காகவும், முதியவர்கள் பலர் முதியோர் இல்லங்களுக்கும், சிறுவர்கள் பலர் சிறுவர் இல்லங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தத் தகவலில் விபரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

நோய்கள், வயோதிபம் மற்றும் காரணங்களுக்காகவும் இடைத்தங்கல் முகாம்கள், வைத்தியசாலைகள், இல்லங்கள் என்பவற்றில் பலர் உயிரிழந்துள்ள போதிலும் அதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published.