வரதட்சணை வழக்கில் 2 மாத குழந்தை-முன்ஜாமீனும் கொடுத்த கோர்ட்!!!

மும்பை: மும்பையில், வரதட்சணைப் புகாரில் 2 மாதக் கைக்குழந்தையை போலீஸார் சேர்த்த கொடுமை நிகழ்ந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு கோர்ட் முன்ஜாமீனும் வழங்கியதுதான் கொடுமையிலும் பெரும் கொடுமை.

இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே வரதட்சணைக் கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்ட முதல் குழந்தை இதுவாகத்தான் இருக்கும். இந்தக் குட்டிப் பாப்பாவின் பெயர் சோயா. பிறந்து 2 மாதங்களே ஆகிறது.

சோயாவின் தாயார் பெயர் ரேஷ்மா கான். சோயாவின் தந்தையின் 2வது மனைவியான ஷகீலா என்பவர், வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி தனது கணவர் குடும்பத்தினர் மீது போலீஸில் புகார் கொடுத்தார்.

ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் – சோயா பெயர் உள்பட – புகாரில் குறிப்பிட்டிருந்தார் ஷகீலா. போலீஸாரும் எந்தவித முன் யோசனையும் இல்லாமல் அனைவரின் பெயரிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விட்டனர்.

இதையடுத்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர். இதைத் தொடர்ந்து தனது கைக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ரேஷ்மா கான் உள்ளிட்டோர் காவல் நிலையம் சென்றனர்.

அங்கு போன பின்னர்தான் சோயாவின் பெயரையும் வழக்கில் சேர்த்துள்ளது தெரிந்து ரேஷ்மா கான் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தங்களது வழக்கறிஞர் அனில் போலேவுக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த அவர் சோயாவுக்கு முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட பத்து மணி நேரம் காவல் நிலையத்தில் தனது தாயாரின் மடியில் படுத்தபடி காவல் நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. முன்ஜாமீன் கிடைத்தவுடன்தான் குழந்தையுடன் ரேஷ்மா கான் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ரேஷ்மா கான் கூறுகையில், நான் போலீஸாரிடம், அய்யா, இது கைக்குழந்தை, இந்தக் குழந்தையின் பெயரை எப்படி புகாரில் சேர்த்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அதெல்லாம் பெரிய விஷயமில்லை. இதுபோல நிறைய சிறார்களை முன்பு சேர்த்துள்ளோம் என்று அலட்சியமாக கூறினர். இதையடுத்தே நாங்கள் கோர்ட் செல்ல முடிவெடுத்தோம் என்றார் கண்களில் நீர் மல்க.

உலகிலேயே பிறந்த பச்சைக் குழந்தைக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சட்ட நிபுணர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் உஷா மகசாரே கூறுகையில், இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. எந்த சூழ்நிலையில் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது என்றும் புரியவில்லை என்றார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து குழந்தையின் பெயரை எப்ஐஆரில் சேர்த்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் பெயரும் எப்ஐஆரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.