மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்தாரியிடம் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ரஷ்யாவில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டிப்புடன் வலியுறுத்தினார்.


இதுபற்றி விவாதிப்பதற்காக இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்களும் விரைவில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.
மன்மோகன் சிங்கும், சர்தாரியும் அடுத்த மாதம் எகிப்தில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறும் போது மீண்டும் சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர்.

ரஷ்யாவின் 3வது பெரிய நகரமான யக்தரின்பர்க்கில் உள்ள “ஹயாத் ரீஜன்சி” ஓட்டலில் ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) மாநாடு நேற்று நடந்தது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர் நாடுகள் என்ற முறையில் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தன.
தனியாக பேச்சு: மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் மாநாட்டு மண்டபத்தில் நேருக்கு நேராக சந்தித்தனர். அப்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருவரும் இணைந்து நின்று போட்டோவுக்கு “போஸ்” கொடுத்தனர்.

மாநாட்டு இடைவேளையில் நேற்று மதியம் இருவரும் சந்தித்துப் பேசினர். மும்பை தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவை.

உதவியாளர்கள் இன்றி மன்மோகன் சிங்கும், சர்தாரியும் தனியாகவே பேசினார்கள். அப்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் பகிரங்கமாகவே வற்புறுத்தினார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ஜமாத்- உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் தருகிறது என்றும் சர்தாரியிடம் மன்மோகன் சிங் கடுமையாக கூறினார்.

இன்னும் ஆதாரம் தேவை: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பதில் அளிக்கையில், “மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் சில தீவிரவாதிகளை பிடித்து உள்ளோம். ஆனால் இந்தியா தரப்பில் இருந்து இன்னும் அதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன” என்றார். இதற்கு இந்தியா தரப்பில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களை மன்மோகன்சிங் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் விரைவில் சந்தித்துப் பேசுவது என்றும், அடுத்த மாதம் எகிப்தில் நடைபெற உள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டின் போது மன்மோகன் சிங்கும், சர்தாரியும் மீண்டும் சந்தித்துப் பேசுவது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.