தடுப்பு முகாமில் அவலப்படும் மக்களை சுட்டிக்காட்டி அரசியல் நடத்துகிறது ஹெல உறுமய: மனோ கணேசன் பா.உ.

தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் இன்று உணவையும், உடையையும் மாத்திரமே கோருகின்றார்கள். அவர்கள் அதிகார பரவலாக்கலையும், அரசியல் தீர்வையும் கேட்கவில்லை….

எனவே அதிகார பரவலாக்கலும், அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை என பௌத்த மதத்தின் பெயரால் கட்சி நடத்தும் ஜாதிக ஹெல உறுமய தேரர்கள் பகிரங்கமாக கூறி வருகின்றார்கள்.

இந்த அப்பட்டமான பேரினவாத அரசியலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரளவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,

தடுப்பு முகாம்களில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்ற மக்கள் அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கின்றார்கள். குழந்தைகளும், வயோதிபர்களும் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பெருந்தொகையான பெண்கள் தனித்து பாதுகாப்பற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பெருந்தொகையானோர் காயப்பட்டும், பத்தில் ஒருவர் அங்கவீனமாகியும் உள்ளார்கள்.

உணவும், மருந்தும், அடிப்படை வசதிகளும் பாரிய பற்றாக்குறையில் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றிக்கும் மேலாக ஒட்டுமொத்தமான அகதி வாழ்க்கை வாழும் மக்களின் தனிப்பட்ட அடையாள விபரங்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. விசாரணைக்காக அழைத்து செல்லப்படுபவர்கள் பற்றிய தரவுகள் தரப்படுவதில்லை.

இத்தகைய ஒரு நிர்க்கதியான நிலையில் வாழ்கின்ற மக்களுக்கு அதிகார பரவலாக்கலை பற்றியும், அரசியல் தீர்வை பற்றியும் சிந்திப்பதற்கு ஒருபோதும் அவகாசம் இருக்க முடியாது.

பாராம்பரியமிக்க எமது மக்களை கையேந்தி இரந்து வாழும் மக்களாக தடுத்து வைத்துக்கொண்டு அவர்களது அரசியல் அபிப்பிராயங்களை பற்றி கருத்து தெரிவிப்பது அப்பட்டமான மனிதாபிமானமற்ற செயலாகும்.

அதற்கு மேல் அவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமது சொந்த பேரினவாத அரசியல் நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவது அப்பட்டமான இனவாதமாகும்.

தமிழ் பயங்கரவாதத்திற்கும், தமிழ் பிரிவினைவாதத்திற்கும் எதிரான யுத்த வெற்றியை அடைவதற்கு அரசாங்கத்தை ஊக்குவித்ததற்கான பெருமை தங்களுக்கு மட்டுமே உரிமையானது என ஜாதிக ஹெல உறுமயவும், ஜேவிபியும், விமல் வீரவன்சவின் கட்சியும் இன்று போட்டி போட்டு கூறிவருகின்றன.

இந்த போட்டியையிட்டு தமிழ் மக்களுக்கு அக்கறை கிடையாது. ஆனால் இவர்கள் கூறுவதுபோல தமிழ் பயங்கரவாதத்தையும், தமிழ் பிரிவினைவாதத்தையும் யுத்தத்திற்கான அடிப்படை காரணங்களாக மூளை உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் பேசும் மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரத்தை பிரித்து வழங்குவதன் மூலமே நாட்டு பிரிவினையையும், அரசியல் வன்முறையும் முடிவிற்கு கொண்டுவர முடியும்.

இந்த நிலைப்பாட்டில் அனைத்து தேசிய ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரட்டப்படவேண்டும். இதற்கான ஆரம்ப அடிப்படைகளை ஜனநாயக மக்கள் முன்னணி தற்சமயம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.