பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பேச்சு: மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு?

புதுடில்லி: அடுத்த மாதம் 2ம் தேதி, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து 3ம் தேதி, ரயில்வே பட்ஜெட்டும், 6ம் தேதி, பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. பட்ஜெட் கூட்டத் தொடரின் போதே, பெட்ரோல் விலை உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை முடிவு செய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: அடுத்த மாதம் 2ம் தேதி, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து 3ம் தேதி, ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். இதையடுத்து, 2009-10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அடுத்த மாதம் 6ம் தேதி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரின் போது, மானிய கோரிக்கைகளும், அவற்றின் மீதான விவாதங்களும் நடைபெறும். இவ்வாறு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் பொது பட்ஜெட்டை நிறைவேற்றாவிட்டால், செலவினங்களுக்காக பார்லிமென்டில் மீண்டும் அனுமதி பெற வேண்டும். எனவே, இதை தவிர்க்கும் வகையில் ஜூலை முதல் வாரத்திலேயே பட்ஜெட்டை தாக்கல் செய்வதென மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு எப்போது? இதற்கிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. பேரல் விலை 70 டாலரைத் தாண்டிவிட்டது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பூதம், மற்ற விஷயங்களை விட முக்கிய பேச்சாகி விட்டது. இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கு பின், செய்தியாளர்களிடம் முரளி தியோரா கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது. இருந்தாலும், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் வந்து விட்டது. அடுத்த மாதம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இதுகுறித்து தெரிவிப்பார். கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பட்ஜெட்டின் போது முடிவு செய்யப்படும். இதற்கான கால அவகாசம் எதையும் தெரிவிக்க முடியாது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்வது தொடர்பான விஷயங்கள் குறித்து தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.