பிரபாகரனை சித்திரவதை செய்து கொல்லவில்லை – இலங்கை மறுப்பு

கொழும்பு: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு கூறியதைப் போல விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சித்திரவதை செய்து கொல்லவில்லை என்று இலங்கை அரசு மறுத்துள்ளது.

சமீபத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரபாகரனை உயிருடன் பிடித்த ராணுவம், அவரை ஒரு ராணுவ முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்தது.

அதை ஒரு தமிழ் அரசியல் தலைவரும், ராணுவ தளபதி ஒருவரும் நேரில் பார்த்தனர். பின்னர் பிரபாகரனின் கண் முன்பாகவே அவரது 12 வயதான இளைய மகன் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றது ராணுவம். அதன் பின்னர் பிரபாகரனையும் சுட்டுக் கொன்று விட்டனர் என்று தெரிவித்திருந்தது.

இந்த கூற்றை ராணுவமும், அரசும் மறுத்துள்ளன.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறுகையில், இதில் எந்த உண்மையும் இல்லை. பிரபாகரனையோ அல்லது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வேறு எந்த தலைவரும் உயிருடன் பிடிபடவில்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல ராணுவ தளபதி சரத் பொன்சேகா, மேஜனர் ஜெனரல் கமல் குணரத்னே ஆகியோரும், பிரபாகரன் உயிருடன் பிடிபடவில்லை. நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் நடந்த சண்டையில்தான் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.