பிரபாகரன் சித்திரவதை செய்து படுகொலை; இளைய மகன் கொடூரக் கொலை-மனித உரிமை அமைப்பு

டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடித்த ராணுவம், மிகப் பெரிய அளவில் சித்திரவதை செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளது.

பிரபாகரனைக் கொல்வதற்கு முன்பாக அவரது இளைய மகன் பாலச்சந்திரனை (வயது 12) பிரபாகரன் கண் முன்பாகவே கொடூரமாக சுட்டுக் கொன்றது ராணுவம் என்று டெல்லியைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் தொடர்பாக இன்னும் கூட முழுமையான, தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற சுயேச்சையான மனித உரிமை அமைப்பு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை ராணுவத்திலிருந்து ரகசியமாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது …

இலங்கை ராணுவத்தின் மிக முக்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ள நம்பகத்தன்மையான தகவல் இது. வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடித்துள்ளது ராணுவம். பின்னர் அவரை ராணுவ முகாம் ஒன்றுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அனேகமாக இது ராணுவத்தின் 53வது படைப் பிரிவின் தலைமையகமாக இருக்கலாம்.

அங்கு முக்கிய தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் மற்றும் முக்கிய ராணுவ தளபதி ஒருவர் முன்னிலையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

இந்த சித்திரவதையை ராணுவத்தினர் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

பிரபாகரனுடன் சேர்த்து பிடிக்கப்பட்ட அவரது 12 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்திரனையும் ராணுவத்தினர் சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் பிரபாகரன் கண் முன்பாக பாலச்சந்திரனை நிறுத்தி படுகொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர்தான் பிரபாகரனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்வாறு சுட்டபோது அவரது தலையின் பின் பக்கம் பிளந்து விட்டது.

மேலும், கடைசி நேர சண்டை நடந்த போரற்ற பகுதியில் சிக்கியிருந்த விடுதலைப் புலிகள் யாருமே உயிருடன் மிஞ்சவில்லை. அனைவருமே படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

இந்தக் கொலைகள் தொடர்பாக ராணுவத்திடமிருந்து உண்மையான தகவல்கள் வெளி வர வாய்ப்பில்லை. எனவே உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டு வர பாரபட்சமற்ற, விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.