20 நாடுகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை அரசு தோற்கடித்தது: வெளியுறவு அமைச்சர் ரோஹித

இருபது நாடுகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தோற்கடித்தது என்று நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம அந்த நாடுகள் அனைத்திற்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவிய அந்த 20 நாடுகளும் எவை என்று குறிப்பிட்டுக் கூறாத அமைச்சர், அந்த நாடுகள் அனைத்துக்கும் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:

30 வருடங்களாக நாட்டைப் பிடித்து ஆட்டிய பயங்கரவாதத்தை நாம் இராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம். இதன் மூலம் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டிய முதல்தர நாடாக இலங்கை உலக அரங்கில் ஜொலிக்கின்றது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் எமது நடவடிக்கைக்கு 20 நாடுகள் உதவின. அந்நாடுகளுக்கு இச்சந்தர்ப்பத்தில் நான் நன்றிகள் தெரிவிக்கின்றேன் என்றார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் உள்ள மக்களை நாம் நல்ல முறையில் கவனித்து வருகிறோம். அவர்களை மிக விரைவில் மீள்குடியமர்த்துவோம்.

ஐ.நா. செயலாளர் இலங்கை வந்தபோது அவருக்கும் எமது ஜனாதிபதிக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது என்று ஐ.தே.க. எம்.பியான லக்ஷ்மன் செனவிரட்ன இங்கு கூறினார். அப்படி ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்று நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

அதேபோல் இஸ்ரேலுடன் எமக்கு உறவில்லை என்றும் அந்நாடு எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசமட்டத்தில் யோசனை கொண்டுவருவதற்குப் பின்னணியில் இருந்தது என்றும் செனிவிரட்ன மேலும் கூறியிருந்தார்.

இஸ்ரேல் எந்தவிதமான சர்வதேச கூட்டத்திலும் எமக்கு எதிராக யோசனைகளைக் கொண்டு வந்ததில்லை. அந்நாட்டுடன் நாம் நல்ல உறவை பேணி வருகிறோம்.

இஸ்ரேலின் தலைநகரில் எமது நாட்டுத் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளது. எமது தூதுவர் அந்நாட்டுடன் நல்ல உறவைப் பேணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்றார் அமைச்சர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.