ஒருவருக்கு ஒரு பதவி மட்டும் :ராகுல்காந்தி அதிரடி

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. என்றாலும் உத்தபிரதேசம், பீகார், தமிழ் நாடு உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது.

எனவே, காங்கிரஸ் கட்சியை அனைத்து மாநிலங்களிலும் பலப்படுத்தும் முயற்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இறங்கி உள்ளார். அடிமட்டத்தில் இருந்தே காங்கிரசைப் பலப்படுத்த பல்வேறு திட்டங்களை அவர் வகுத்துள்ளார்.

முதல் கட்டமாக மாணவர் காங்கிரஸ் அமைப்புக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தெரிவு செய்ய ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். அது போல், இளைஞர் காங்கிரஸ் பிரிவையும் பலப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த டிசம்பர் மாதத்துக்குள் கட்சித் தேர்தலை நடத்தி இளைஞர்களுக்குக் கட்சியில் அதிக வாய்ப்பு வழங்க ராகுல் முடிவு செய்துள்ளார்.

ராகுல் காந்தியின் யோசனைப்படி, காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தையும் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இனிக் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசில் பதவி வகிக்க முடியாது. அரசில் பதவி வகிப்பவர்கள் கட்சி பொறுப்பை விட்டு விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சி பொதுச்செயலாளர்கள் பொறுப்பிலும் மத்திய மந்திரி பதவியிலும் இருக்கும் குலாம்நபிஆசாத், வீரப்ப மொய்லி, முகுல்வாஸ்னிக், பிரதிவிராஜ் சவான், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவி வகிக்கும் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி, கட்சி பதவியுடன் மத்திய மந்திரி பதவிகளையும் வகிக்கும் நாராயணசாமி, ஜோஷி, ஆகியோர் விரைவில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவர் எனத் தெரிகின்றது.

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.