ஏழாயிரம் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு: சட்டசபையில் அறிவிப்பு வெளியாகும்?

தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு துறைகளிலும் சேர்த்து 7,000 காலிப் பணியிடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு, பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியாகலாம்.

தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தேவைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்வதிலும் மூன்று ஆண்டுகளாகவே தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதிக்குள், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மூலம் காலிப் பணியிடங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு முன், ஏற்கனவே பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தி, ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்படுகின்றனர்.

அதன் பின், இறுதியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டு, அந்த இடங்களில், புதிதாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், கடந்த மாத இறுதியில் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

பள்ளிக் கல்வித் துறைக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், தொடக்க கல்வித் துறைக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களும் காலிப் பணியிடங்கள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்தப் பணிகள் சில தினங்களில் முடிவடையுமென எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பின், மாவட்ட வாரியான காலியிட விவர அறிக்கை, இரண்டு துறைகளின் இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட வகைகளில் 3,000 காலிப் பணியிடங்கள் வரும் என்றும், தொடக்க கல்வித் துறையில் 4,000 காலிப் பணியிடங்கள் இருக்கலாம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.