தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேசத் தயார்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களுக்குத் திருப்திகரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசுவதற்குத் தயாராகவிருக்கிறது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

பல விடயங்கள் தொடர்பாகக் கலந்தாலோசிப்பதற்காக இம்மாதம் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றக் குழு அறையில் ஒன்றுகூடும் கூட்டமைப்பு மேற்படி விடயத்தை மிகத் தீவிரமாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவொன்றை எடுக்கும் என்று அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பா.உ.  அரியநேத்திரன் தெரிவித்திருப்பதாவது:-

தமிழர்கள் தமது உரிமையைப் பெறுவதற்காக 60 வருடங்களாகப் போராட்டம் நடத்தினர். 30 வருடங்கள் அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டம் தோற்றுப் போனதால் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது.

ஆயுதப் போராட்டமும் முப்பது வருடங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் அதுவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதனால், இப்போதும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீடிக்கின்றது. இதனால் தொடர்ந்தும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இங்குள்ளனர்.

யுத்தம் முடிவுற்றாலும் எமது நிலைப்பாட்டில் உறுதி பொருத்தமான அரசியல் தீர்வின் ஊடாகவே தமிழ்பேசும் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நாம் அரசிடம் தொடர்ச்சியாகக் கூறி வந்தோம். யுத்தம் இப்போது முடிவுற்ற போதிலும் நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளோம்.

நல்லதொரு அரசியல் தீர்வை தமிழ் பேசும் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றோம். இது தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவும் தயாராகவுள்ளோம்.

ஜனாதிபதி நம்மை முதலில் பேச்சுக்கு அழைத்தபோது நாம் அந்த அழைப்பை நிராகரித்தோம். யுத்தத்தை நிறுத்தி சாதாரண நிலையை ஏற்படுத்தினால் மாத்திரமே நாம் பேச்சுக்கு வருவோம் என்று ஜனாதிபதியிடம் கூறினோம். அவர் எமது வேண்டுகோளை நிறைவேற்ற மறுத்ததால் நாம் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச மறுத்தோம்.

ஆனால், இப்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. அதன் காரணத்தால் நாம் ஜனாதிபதியைச் சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசத் தயாராகவிருக்கின்றோம்.

சூட்டோடு சூடாகத் தீர்வை வழங்க முன்வரவேண்டும்

இந்த மாதம் ஒன்பதாம் திகதி பல விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக எமது கூட்டமைப்பு உயர்பீடம் ஒன்றுகூடுகின்றது. அப்போது இந்த விடயம் அலசி ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும்.

ஜனாதிபதி மீது சிங்கள மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் அவர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பில் எந்தவித எதிர்ப்பையும் தெற்கில் எதிர்கொள்ளமாட்டார். இதைப் பயன்படுத்தி ஜனாதிபதி இணைந்த வடக்கு கிழக்கிற்குள் திருப்திகரமானதொரு தீர்வை வழங்கலாம்.

ஆனால், காலம் தாமதித்தால் நிலைமை மாற்றமடைந்துவிடும். இப்போதுள்ள சிங்களவர்களின் மனநிலையே அப்போதும் இருக்கும் என்று சொல்லமுடியாது. அத்தோடு அரசியல் அழுத்தங்களும் அதிகரித்துவிடும்.

ஆகவே, ஜனாதிபதி தமிழ் பேசும் மக்களுக்குத் தீர்வை வழங்க இதய சுத்தியுடன் செயற்படுவாரேயானால் அவர் இப்போதே சூட்டோடு சூடாக தீர்வை வழங்க முன்வரவேண்டும் என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.