கடைசி நாட்களில் 3000 முதல் 5000 வரையான மக்களே பலியாகினர்; இலங்கை அரசு: ஆசிய மனித உரிமை கண்காணிப்பு அதிகாரி பிரட் அடம்ஸ் மறுப்பு

அரசு அறிவித்த போரற்ற பகுதியில், போரின் கடைசி நாட்களில் மொத்தமே 3000 முதல் 5000 அப்பாவி மக்கள்தான் பலியாகியிருப்பார்கள். 20,000 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. என்று கூறியுள்ளார் இலங்கை பேரிடர் நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் ரஜீவ விஜேசிங்க.
அவர் கூறுகையில், மொத்தமே 3000 முதல் 5000 அப்பாவி மக்கள்தான் கடைசி நாட்களில் பலியாகியிருப்பார்கள். 20,000 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. அதேபோல ஏப்ரல் மாத கடைசியில் 7000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுவதிலும் உண்மை இல்லை. என்று இலங்கை அரசு பொயப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

கடைசி நாட்களில் 5000 பேர் கொல்லப்பட்டதற்கும் கூட இராணுவம் காரணம் அல்ல. அவர்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதே இந்த மரணத்திற்குக் காரணம்.

ஐ.நா. அறிக்கை கூறுவதை நம்ப முடியாது. காரணம், அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் இல்லை.

இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று  ஜனாதிபதியே அறிவித்திருந்தார். நானும் இராணுவ அதிகாரிகளிடம் பேசியபோது கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்தது.

81 எம்எம் மோர்ட்டர்களை மட்டுமே இராணுவம் பயன்படுத்தியது. ஆனால் விடுதலைப் புலிகளோ டாங்குகளை பயன்படுத்தி தப்பி ஓட முயன்ற தமிழர்களைக் கொன்றனர் என்றார் விஜேசிங்க.

ஆனால் விஜேசிங்கவின் இக்கூற்றை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய மனித உரிமை கண்காணிப்பு என்ற அமைப்பின் அதிகாரி பிரட் அடம்ஸ் மறுத்துள்ளார்.

ஆயுதங்களில் கனரக ஆயுதம் என்பதை நிர்ணயிக்க எந்தவித அளவுகோலும் இல்லை. போரின் முடிவின்போது, மிகக் குறுகிய பரப்பளவுக்குள் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் முடக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் எந்த வகையான ஆயுதத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் அது பேரழிவுக்கே வழி வகுக்கும்.

புலிகள் வசம் இருந்த பகுதியிலிருந்து போரற்ற பகுதிக்கு போகுமாறு அரசு மக்களை வற்புறுத்தியது. அதை நம்பி மக்கள் அங்கு பெரும் திரளாக சென்றனர். ஆனால் அங்கு வந்தவர்களையும் இராணுவம் கொடூரமாக தாக்கியது.

81 எம்எம் மோர்ட்டர் தவிர வேறு பல கனரக ஆயுதங்களையும் இராணுவம் பயன்படுத்தியது மறுக்க முடியாத உண்மையாகும். இதை அவர்கள் திரும்பத் திரும்ப மறுத்து வருகிறார்கள். இலங்கைப் படையினர் கடுமையான போர்க் குற்றத்தை செய்துள்ளனர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்கிறார் பிரட் அடம்ஸ்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.