புலிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள் என்றால் பொதுமக்களை ஏன் முகாம்களில் தடுதது வைத்திருக்கிறீர்கள்: விக்கிரமபாகு கேள்வி

வன்னியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக மனிதப்பேரழிவிலிருந்து மீண்டு வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து வந்துள்ள இலட்சக்கணக்கான பொதுமக்களில் 9 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இனம்காணப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில்….

ஏனைய மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாகச் சென்று மீள் குடியேறி வாழ்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

போர் நடவடிக்கை காரணமாக மூன்று இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவர்களில் 9 ஆயிரம் விடுதலைப்புலிகளை கைதுசெய்து வேறு இடத்தில் வைத்திருப்பதாக அரசாங்கமே அறிவித்துள்ளது.

எனவே தற்போது முகாம்களில் உள்ளவர்கள் அப்பாவிப்பொதுமக்களேயாவர். அந்த அப்பாவிப்பொதுமக்களை விடுவிப்பதற்காகவே இவ்வளவு பெரும் செலவில் யுத்தத்தை முன்னெடுத்ததாக அரசாங்கம் கூறிவந்தது. தற்போது அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது. மக்களையும் மீட்டுள்ளது.

அப்பாவிப்பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராகவே தாம் இந்த யுத்தத்தை முன்னெடுத்ததாக அரசாங்கம் கூறிவந்தது. இன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மக்களை விடுவிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியது உண்மை என்றால் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவனங்கள் இம்மளைச் சந்திப்பதற்கான தடையை ஏன் விதிக்கவேண்டும்?

எனவே அரசாங்கம் வன்னி தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கவேண்டும். அப்பாவி வன்னி மக்களை மீள்குடியேற்றும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இதற்கு எதிராக பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அத்துடன் இந்த மக்களைக் காப்பாற்ற எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் நாம் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.