புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும் தான்: ஜனாதிபதி மஹிந்த பேட்டி

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும் தான் என “தி வீக்’ என்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“இனப் பிரச்னைக்கு இலங்கை நிலைமைக்கு ஏற்ப, அரசியல் தீர்வு காணப்படும். இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகத்தான் இலங்கை அரசியல் சட்டத்துக்கு 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்திய நிலைக்கும் ஏற்ப புதிய தீர்வு காணப்படும். இலங்கையின் அனைத்து தரப்பினரின் யோசனைகளும், அச்சங்களும் அப்போது கருத்தில் கொள்ளப்படும்.

இந்தியாவுக்காக போரிட்டோம்:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.

பயங்கரவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகள் மேற்கொள்ள வேண்டிய போரை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இந்தியாவுக்கு நன்றி:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி. மற்றெல்லாவற்றையும்விட இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.

புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது.

விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.

புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபக்ச.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.