பிரபாகரன் இறந்த பிறகு சுடப்பட்டாரா?

முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன்பு ராணுவம் கூறியதைப் போல தப்பி ஓட முயலவில்லை என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லட்சுமண் ஹலகலே கூறியுள்ளார்.

ஒரே நாளில் ராணுவம் இப்படி மாற்றிக் கூறியுள்ளதால், பிரபாகரன் எந்தச் சூழ்நிலையில் கொல்லப்பட்டார், யார் அவரை சுட்டுக் கொன்றது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் கம்பீரமாக காணப்படும் பிரபாகரனின் தலையில் குண்டுகள் பாய்ந்துள்ளன.

முதலில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது ராணுவம் அவரை சுட்டுக் கொன்றதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில் குண்டுக் காயம் உள்ளது. அதைக் காட்டாமல் மறைக்க தொப்பியை வைத்து ராணுவம் மறைத்துள்ளது.

சயனைட் அருந்தி இறந்த பின் சுடப்பட்டிருக்கலாம்…

மேலும், தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொன்றதாக முன்பு கூறப்பட்டதை இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஹலகலே இன்று மறுத்துள்ளார். இதனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் நெருக்கத்தில் இருந்து பிரபாகரன் சுடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

அவர் சயனடை அருந்தி தற்கொலை செய்த பின்னர் உடலை எடுத்து வந்து தலையில் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் அவரது உடல் கிடந்த இடம் என்று ராணுவம் கூறுவது பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு எப்படி அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரியவில்லை.

மொத்தத்தில் பிரபாகரனின் மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.