கொழும்புப் பயணம் தோல்வியடைந்த நிலையில் இன்று நியூயோர்க் திரும்புகின்றார் விஜய் நம்பியார்

மோதலை இடைநிறுத்தி, மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கான உடனடித் தேவைகளை கவனிப்பதை நோக்கமாகக் கொண்டு கொழும்பு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், தனது பயணம் எந்தவிதமான பயனையும் பெற்றுத்தராத நிலையில் இன்று நியூயோர்க் திரும்புகின்றார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது சிறப்புப் பிரதிநிதியாகவே அவரை கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தார்.

நியூயோர்க்கில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் புதுடில்லி சென்று இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு கொழும்பு சென்ற விஜய் நம்பியார், நேற்று சிறிலங்கா அதிகாரிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தினார்.

சிறிலங்காவுக்கு ஒரு மாத காலத்தில் இரண்டாவது பயணத்தை மேற்கொண்டிருக்கும் நம்பியார், மோதல் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிகளைக் கிடைக்கச் செய்வதே தன்னுடைய இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். கொழும்பு செல்வதற்கு முன்னர் ‘லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகைக்கு தொலைபேசி மூலமாக வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இதனை அவர் தெரியப்படுத்தினார்.

இருந்தபோதிலும் இந்த விடயம் தொடர்பாக அவரிடம் அதிகளவு நம்பிக்கை வெளிப்படவில்லை என ‘லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை ஐ.நா. பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் கொழும்பில் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவர் ஆராய்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் இந்த விடயத்தை சிறிலங்கா அரசு ஒரேயடியாக நிராகரித்துவிட்டதால் அதற்கான மேலதிக அழுத்தங்களைக் கொடுப்பதற்கு அவர் முற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அனைத்து வழிகளிலும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே சிறிலங்கா அரசு விரும்புகின்றது என்பதுதான் எனது கருத்தாகும். சரணடைவது தொடர்பான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுமாறு சிறிலங்கா அரசைத் தூண்டுவது கடுமையான போராட்டமாக இருக்கும் என நான் கருதுகின்றேன்” என இது தொடர்பாகக் குறிப்பிட்ட நம்பியார், பேரழிவு ஒன்று ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்றது என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகவும் தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.