போலீஸ் நிலையத்துக்கு பூட்டு : எல்லாருக்கும் தேர்தல் ‘டூட்டி’

மேட்டூர் : தேர்தல் பணி தொடர்பாக மகளிர் போலீசார் சேலம் புறப்பட்டு சென்று விட்டதால், மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவங்கிய பின் நேற்று முதன் முறையாக பூட்டப்பட்டது. மேட்டூரில், பவானி மெயின்ரோட்டில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., மூன்று ஏட்டுகள் பணி புரிகின்றனர்.

தேர்தலின் போது, சேலம் புறநகர் பகுதியைச் சேர்ந்த 33 ஸ்டேஷன் மற்றும் ஐந்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் அனைவரும் சேலத்திற்கு வரழைக்கப்பட்டு, அங்கே அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓட்டுச் சாவடிகளுக்கு பிரித்து அனுப்புவர். சேலம் புறநகர் போலீஸ் ஸ்டேஷனில் சென்ட்ரி, ரைட்டர் தவிர பெரும்பாலான போலீசார் சேலம் சென்று விட்டனர். அதுபோல மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் அனைத்து போலீசாரும் நேற்று தேர்தல் பணிக்கு ஆஜராவதற்காக சேலம் புறப்பட்டு சென்று விட்டனர். முன்பு நடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலின் போது, ஒரு பெண் போலீசை ஸ்டேஷனில் இருக்க வைத்து இதர போலீசார் செல்வார்கள். அதனால், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறந்து இருக்கும். நேற்று தேர்தல் பணிக்காக மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார் உள்பட அனைவரும் தேர்தல் பணிக்காக சேலம் புறப்பட்டு சென்று விட்டனர். அதனால், நேற்று மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு போடப்பட்டது.

மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை ஒருநாளும் பூட்டியது இல்லை. இந்நிலையில், தேர்தல் பணிக்காக போலீசார் சேலம் சென்றதால் முதன் முறையாக ஸ்டேஷனுக்கு பூட்டு போடப்பட்டது. வழக்கு தொடர்பாக புகார் மற்றும் விசாரணைக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.