மும்பை போன்று மேலும் ஒரு தாக்குதல் அபாயம்: உளவு நிபுணர்

மும்பையின் மீது கடந்த ஆண்டு நடத்தப்பட்டது போன்று மேலும் ஒரு தாக்குதல் இந்தியாவின் மீது ஜிஹாதிகள் நடத்தும் ஆபத்து உள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்புகளின் கொள்கை வகுப்பு ஆலோசகர் புரூஸ் ஓ ரீடல் கூறியுள்ளார்.

ஜிஹாதிகள் பாகிஸ்தான் நாட்டை தங்களின் கைக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகின்றனர். அதற்காக அவர்கள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே மோதல் ரீதியிலான தொடர்ந்த ஒரு பதற்றமான நிலையை உருவாக்க திட்டமிடுகின்றனர் என்று கூறியுள்ள புரூஸ் ஓ ரீடல், அவ்வாறு ஒரு மோதல் ரீதியான பதற்றம் நிலவினால் மட்டுமே பாகிஸ்தான் படைப்பலத்தில் 80 விழுக்காட்டினர் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலேயே இருக்கும் நிலை நீடிக்கும், அப்படியான ஒரு சூழலில் மட்டுமே தங்களின் ஆதிக்கத்தை நாட்டிற்குள் நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஜிஹாதிகள் நினைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அயலுறவு பேரவை இதழின் ஆசிரியர் பெர்னார்ட் குவர்ட்ஸ்மேனிற்கு அளித்த நேர்காணில் இவ்வாறு கூறியுள்ள புரூஸ் ஓ ரீடல், அமெரிக்க உளவு அமைப்பின் (சிஐஏ) தெற்காசிய மண்டலத்திற்கான அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்பொழுது அமெரிக்க உள், அயல் உளவு அமைப்புகளின் ஒங்கிணைப்பு சிறப்புக் குழுவின் கொள்கை வகுப்பு ஆலோசகராக உள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டு இந்தியாவின் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல், 2001ஆம் ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல், தற்பொழுது மும்பையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகிய அனைத்தும் இதற்கு உதாரணங்களாகும் என்று கூறியுள்ள புரூஸ், இத்தனைத் தாக்குதல்கள் நடந்த பிறகும் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சமாதான கரம் நீட்டி வருகிறது. ஏனென்றால் லேசான இராணுவ நடவடிக்கை கூட ஒரு முழு அளவிலான போருக்கு வித்திட்டுவிடும் என்பதால் அது கட்டுபாடு காத்து வருகிறது என்று புரூஸ் கூறியுள்ளார்.

இந்தியா கடைபிடித்துவரும் பொறுமையும், கட்டுபாடும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று கேட்டதற்கு, அதுதான் ஜிஹாதிகள் (புனிதப் போராளிகள்) விரும்புவது, இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவினால்தான், தங்களை வளர்த்துக் கொள்ள அது உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர் என்று பதிலளித்துள்ளார்.

ஜிஹாதி நாடாக மாறும் அபாயம்

இன்றைய நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழுக்களின் சங்கமமாக பாகிஸ்தான் மாறிவருகிறது. பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில் மட்டுமின்றி, பஞ்சாப், கராச்சி போன்ற பகுதிகளில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சி பாகிஸ்தான் எனும் நாட்டின் அடிப்படையையே பாதித்துவிடும் அபாயம் உருவாகிவருகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும் என்று புரூஸ் ஓ ரீடல் கூறியுள்ளார்.

இது உடனடியாக நடந்துவிடும் என்று கூறமுடியாது, ஆனால் அப்படிப்பட்ட சாத்தியம் குறுகிய எதிர்காலத்தில் நிகழலாம் என்று கூறியுள்ள புரூஸ், பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் நிலவும் சூழல் ஆபத்தானதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Source & Thanks ; tamil.webdunia.

Leave a Reply

Your email address will not be published.