திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அடிமைகளாக நடத்துகின்றனர் – ஜெ.

சிதம்பரம்: அதிமுக ஆட்சியில்தான் அரசு ஊழியர்கள் கெளவரமாக நடத்தப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சியில், கொத்தடிமைகள் போல நடத்தப்படுகின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சிதம்பரத்தில் பாமக வேட்பாளர் பேராசிரியர் பொன்னுச்சாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது..

தி.மு..க.வினரால், கடந்த மூன்று ஆண்டு காலமாக, காவல்துறையினரும், அரசு ஊழியர்களும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகிறார்கள்.

தி.மு.க-வினரின் சட்டவிரோத செயல்களுக்குத் துணை போகாத அரசு ஊழியர்கள், பழி வாங்கப்படுகிறார்கள்.

2007-ம் ஆண்டு அமைச்சர் ஸ்டாலின் தருமபுரி வந்த போது, தடபுடல் ஏற்பாடுகளை செய்ய பணிக்கப்பட்ட உதவி இயக்குனர் தற்கொலையே செய்து கொண்டார். தி.மு.க.வினரின் தொல்லைகள் காரணமாக பல அரசு ஊழியர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எட்டு அகவிலைப்படியை ஏப்பம் விட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கும், மாநில அரசு ஊழியர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் தான் இந்த கருணாநிதி. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்த போதெல்லாம், மாநில அரசு ஊழியர்களுக்கும் தவறாமல் அதை கொடுக்க வழி வகுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

1989-ம் ஆண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தருகிறேன் என்று சொல்லி, அதில் பல குறைபாடுகளை விட்டுச்சென்றவர் கருணாநிதி. அந்த ஊதியக்குழுவில் ஏற்பட்ட குறைபாடுகளை நான் 1991-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிவர்த்தி செய்தேன். இது மட்டும் அல்லாமல், அகவிலைப்படி உயர்வை அவ்வப்போது கொடுத்து வந்தேன்.

1996 முதல் 2001-ம் ஆண்டு வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்த கருணாநிதி, திவால் ஆகும் நிலைக்கு தமிழ்நாட்டை கொண்டு சென்றார். இதன் விளைவாக, சில கசப்பு மருந்துகளை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாக்கப்பட்டேன். நிதி நிலை மேம்படும் போது, சலுகைகள் வழங்கப்படும் என்பதையும் நான் அப்போதே தெளிவுபடுத்தினேன். அதன்படி, நான் வழங்கினேன்.

50 விழுக்காடு அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க நான்உத்தரவிட்டேன். மிகப்பெரிய நிதி நெருக்கடி இருந்த போதும், அனைத்து அகவிலைப்படிகளும் கொடுக்கப்பட்டன.

எனது ஆட்சிக்காலத்தில், அரசு ஊழியர்கள் எவ்வளவு மரியாதையாக நடத்தப்பட்டார்கள். ஆனால், அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் இன்று ஆளும் தி.மு.க. அமைச்சர்களின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காவல் துறையினர் என அனைவரும் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எனது ஆட்சிக் காலத்தில் பணிஅமர்த்தப்பட்ட தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் தி.மு.க. அரசு பழிவாங்கிக் கொண்டு இருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதம் வழங்கப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியும், மாநில அரசு ஊழியர்களுக்கு இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

எனது ஆட்சி தொடர்ந்திருக்குமேயானால், இந்த நேரத்தில் மத்திய அரசு ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் பாமக வேட்பாளர் ராமதாஸை ஆதரித்து ஜெயலலிதா பேசுகையில்,

நான் எப்பொழுதுமே புதுச்சேரி மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஐரோப்பாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கே ஒரு புதுச்சேரிக்காரரைப் பார்க்க முடியும் என்று அங்கே சென்று வந்த என்னுடைய நண்பர்கள் கூறுவார்கள்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மகத்தான கொள்கைகளை முன் எடுத்துச் சென்ற பிரெஞ்ச் சிந்தனையாளர்களை, முன்னோடிகளாகக் கொண்டு உயர்ந்த சிந்தனை முறைகளை வளர்த்துக் கொண்ட மக்கள் புதுச்சேரி வாழ் மக்கள்.

இவர்கள் கடின உழைப்பாளிகள். மகிழ்ச்சியாக வாழத் தெரிந்தவர்கள் என்றெல்லாம் புதுச்சேரி மக்களைப் பற்றி புகழ்ந்து பேசாதவர்கள் இல்லை. குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் புதுச்சேரி.

விடுதலை பெற்ற காலத்திலேயே ஓரளவுக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகளையும், மக்களிடம் பரந்த மனப்பான்மையையும் கொண்டிருந்தது புதுச்சேரி. கடந்த 60 ஆண்டுகளில் புதுச்சேரி ஒரு ஹாங்காங்கைப் போல, ஒரு சிங்கப்பூரைப் போல, வளர்ச்சி அடையாமல் போய்விட்டதே ஏன்? என்ன காரணம்?

முறையான திட்டமிடுதலும், தேச பக்தி மிகுந்த தலைமையும், ஊழல் அற்ற நிர்வாகமும் இருந்திருந்தால், உலகத் தரம் வாய்ந்த வாழ்விடமாக, வணிக மையமாக, முதலீட்டுத் தலமாக, புதுச்சேரியும் உயர்ந்திருக்கும். எத்தனையோ ஆண்டுகளாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த புதுச்சேரி மக்கள், காங்கிரஸ் கட்சியால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சிந்திக்க வேண்டிய நேரம் இது.

10 லட்சம் மக்களை மட்டுமே கொண்ட சின்னஞ் சிறிய பகுதியான புதுச்சேரியை, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற இடமாக காங்கிரஸ் கட்சியால் உருவாக்க முடியவில்லை என்றால், 110 கோடி மக்களைக் கொண்ட இந்த தேசத்தில், என்ன சமூக முன்னேற்றத்தை, காங்கிரஸ் கட்சியால் கொண்டுவர முடியும்?

இந்த 15-ஆவது மக்கள் அவையைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி தான்! மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி தான்! நீண்ட காலமாக மாநிலங்கள் அவை உறுப்பினராக காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி இருந்து கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சராக வேறு இருந்து கொண்டிருக்கிறார். இந்த மாநில மக்களின் நலன்களுக்காக உருப்படியான திட்டத்தைக் கொண்டு வந்தாரா? புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினாரா?

பஞ்சாலைகளை சீரமைக்க, புதிய தொழிற்சாலைகளை உருவாக்க, வாக்களிப்பீர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே!

புதுச்சேரி மாநிலத்தின் மின்சார தேவைக்காக, ஒரிசா மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுக்கும் உரிமையை மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு வழங்கி இருப்பதாகவும், அந்த உரிமையை புதுச்சேரி அரசு தி.மு.க. உறுப்பினருக்கு சொந்தமான ஜே.ஆர்.கார்ப்பரேசன் என்ற தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்த்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. இதில் மிகப் பெரிய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மத்திய அரசு அமையும் பட்சத்தில், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், புதுச்சேரிக்குத் தேவையான தரமான நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். நாட்டின் வளத்தை சுரண்டும் கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி. பொருளாதார சீரழிவினை ஏற்படுத்தியவர்கள் அவர்கள்.

புதுவையில் கொள்கை முடிவு எடுக்க மத்திய அரசுக்காக காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றிட புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவேன்.

புதுவையில் மாற்றத்தை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை ஏற்படுத்த உங்களுக்காக பாடுபடுவோம் என்றார் ஜெயலலிதா.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.