தலைமைசெயலகம்உட்பட 3 இடங்களில் தீவிபத்து

சென்னை:தலைமைச் செயலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. காசிமேடு மீனவர் பகுதியில் 50 குடிசைகள் சாம்பலாயின.சென்னை தலைமைச் செயலகத்தின் மூன்றடுக்கு மாடி கட்டடத்தில் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

மூன்றாவது மாடியில் பொதுத்துறை அலுவலகமும், ஸ்டேசனரி சப்ளை செய்யும் அலுவலகமும் செயல்பட்டு வந்தது.

இங்கு பணியாற்றிய ஊழியர்கள் பணி முடிந்து மாலையில் சென்று விட்டனர்; கீழ்தளங்களும் மூடப்பட்டிருந்தன.இந்நிலையில், நேற்றிரவு மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தின் பிற பகுதிகளில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். தீ விபத்தை அறிந்த தீயணைப்புப் படையினர், ஆறு தீயணைப்பு வண்டிகள் மற்றும் குடிநீர் லாரிகள் கொண்டு அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

அதற்குள் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், பர்னிச்சர்கள் நாசமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் துரித கதியில் செயல்பட்டதால், கீழ் தளங்களுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. மின் இணைப்புப் பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டது தான் இந்த தீ விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

50 குடிசைகள் சாம்பல்: சென்னை காசிமேடு இந்திரா நகர் பள்ளம் பகுதியில், மீனவர் குடிசைப் பகுதியில் நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு குடிசையில் பிடித்த தீ, காற்றின் திசைக்கேற்ப மற்ற குடிசைகளுக்கும் பரவியது. குடிசைகளில் இருந்து பொதுமக்கள் அலறி அடித்து வெளியேறினர். நான்கு தீயணைப்பு வண்டிகள், ஆறு குடிநீர் லாரிகள் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். அதற்குள், 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

இந்த தீ விபத்துக்கள் நடந்த அதே நேரத்தில், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் தீப்பிடித்தது. தீப்பொறிகள் பறந்ததால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தலைமைச் செயலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் தீ விபத்து நடந்தது, சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.