ஐஏஎஸ் தேர்வு-தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி!!

சென்னை: இந்தாண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் 791 பேர் இந்தத் தேர்வில் வென்றுள்ள நிலையில், இதில் 8ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. கடந்த 2008ம் ஆண்டு நடத்திய முதல்நிலைத் தேர்வில் 3,18,843 பேர் பங்கேற்றனர். இதில் 11,849 பேரே வெற்றி பெற்றனர்.

இவர்களில் 2,140 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் இப்போது 791 பேர் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகப் பதவிகளை ஏற்க உள்ளனர். இதில் 625 ஆண்கள், 166 பெண்கள் ஆவர்.

இந்த 791 பேரில் 96 மாணவ, மாணவிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தேசிய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் சென்னை அண்ணாநகரில் உள்ள கணேஷ் ஐஏஎஸ் அகாடெமியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் (29) தேசிய அளவில் 9வது ரேங்க்கைப் பிடித்துள்ளார்.

இதையடுத்து சென்னை மனித நேயம் அமைப்பு நடத்தும் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற அருண்சுந்தர் தயாளன் 22வது ரேங்க்கையும், கணேஷ் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சௌம்யா, சுப்ரஜா, ஆனந்த் ஆகியோர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மனித நேயம் அமைப்பை அதிமுக பிரமுகரான சைதை சா.துரைசாமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் பொதுத் தொண்டில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் ஆவார்.

மொத்தத்தில் தமிழத்தைப் பொறுத்தவரை கணேஷ் பயிற்சி மையத்தில் பயின்ற 30 பேரும், மனித நேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 24 பேரும், சங்கர், சத்யா உள்ளிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் உள்பட 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

329வது ரேங்க் பிடித்த ஆசிரியை…

இந்தத் தேர்வில் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரேமி தேசிய அளவில் 329வது ரேங்க்கை பிடித்துள்ளார். இவர் மாத்தூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.

இவர் சென்னை மனித நேய இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்.

விவசாயி மகன்…

அதே போல மேட்டூர் அணை அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் 345வது ரேங்க்கைப் பெற்றுள்ளார். இவர் கோவை உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்தவர்.

இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் அகாடெமியில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.