உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு

அன்னை இந்திரா காந்தி படையெடுத்து வங்காளதேசம் உருவாக்கியது போல், தங்கள் முயற்சியால், மனிதப் பேரவலத்தின் உச்சத்தில் அழிவுறும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வாக தமிழீழத் தாயகம் மலர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் பின்னால் துணை நிற்பார்கள் என நோர்வே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக நோர்வே தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகத் தமிழரின் ஏகோபித்த உணர்வாம் தமிழீழ தாயக கோட்பாட்டை தாங்கள் ஏற்று அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என கூறியதன் மூலம், இதுவரை காலமும் தன்னைத் தானே தமிழின தலைவர் என கூறிக்கொண்டு தாய்த்தமிழக மக்களையும் உலகத்தமிழரையும் ஏமாற்றிய தமிழின துரோகிகளுக்கு தாங்கள் நல்லதோர் சாட்டை அடி கொடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து இவ்வளவு பேரிழப்புக்களுக்கு மத்தியிலும் உலகத் தமிழினம் பேருவகை கொள்கின்றது.

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு புரட்சி தலைவர் வழங்கிய பங்களிப்பும் பேராதரவும் தாங்கள் அறியாதது அல்ல. புரட்சி தலைவர் வழிவந்த தாங்கள் தொடர்ந்தும் தனித் தமிழீழம் உருவாக தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு எம் மக்களின் அவலம் தீர தமிழீழம் மலர தொடர்ந்தும் பாடுபட வேண்டும் என நோர்வே வாழ் தமிழ் மக்களின் சார்பாக நோர்வே தமிழ் சங்கம் வேண்டி கொள்கின்றது.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வாழ்த்துகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks ; puthinam

Leave a Reply

Your email address will not be published.