இதுவரை ஓட்டம் பிடித்தவர் இப்போது மட்டும் சிக்குவாரா? 5 சதுர கி.மீ.,க்குள் பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா?

கொழும்பு: புலித்தலைவர் பிரபாகரன், இத்தனை ஆண்டுகளில், சிக்கலான சமயங்களில் ஓடி ஒளிந்திருக்கிறார்; ஒரு முறை கூட களத்தில் இருந்ததும் இல்லை; சிக்கியதும் இல்லை. அப்படியிருக்க, இப்போது இலங்கை ராணுவம் நம்புவது போல, 5 சதுர கி.மீ., பரப்புக்குள் இருப்பாரா? இது தான் கொழும்பில் உள்ள இந்திய வட்டாரங்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் உலவும் சந்தேகம்.

இலங்கை முல்லைத்தீவில், ராணுவம் சுற்றிவளைத்துள்ள 5 ச.கி.மீ., பரப்பில் பிரபாகரன் மறைந்திருக்கிறார்; மக்களோடு மக்களாக உள்ள அவரை பிடிப்போம் என்று இலங்கை ராணுவம் திடமாக நம்புகிறது.

ஆனால், “பிரபாகரன், போர் முனையில் இருக்க வாய்ப்பில்லை; இலங்கை ராணுவம் முல்லைத்தீவை நெருங்குமுன்பே, கடல் வழியாக தப்பி விட்டார்; தென்னாப்ரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அவர் பதுங்கி இருக்கலாம்’ என்று சில தகவல்கள் வந்த வண்ணமும் உள்ளன. கொழும்பில் உள்ள இந்திய அதிகார வட்டாரங்கள் தரப்பிலும் இப்படி ஒரு தகவல் உலவி வருகிறது. கிளிநொச்சியை தாண்டி, புலிகளின் முக்கிய இடமான புதுக்குடியிருப்பு, ராணுவம் வசம் வீழப்போகிறது என்று உறுதியானதும், முல்லைத்தீவு ஒட்டிய கடல் பகுதியில் கடற்புலிகள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது; இலங்கை கடற்படையுடன் மோதவும் செய்தது என்று தகவல் வந்தது. பிரபாகரன் தப்பத்தான் அப்படி ஒரு அதிரடியில் இறங்கியிருக்கலாம் என்று இந்திய அதிகார வட்டாரங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளது. பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, போர் முனையில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு அவ்வப்போது, கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் இருந்தார் பிரபாகரன்.

சமீப காலமாக அவர் குரல் ஒலிக்கவே இல்லை. புலிகளின் ரேடியோ தகவல்களை இடைமறித்து கண்காணிக்கும் இலங்கை ராணுவத்துக்கு பிரபாகரன் குரல் கேட்காதது சற்று குழப்பமாகத்தான் உள்ளது. இரண்டாவது காரணம், கடந்த 30 ஆண்டுகளில் பல கட்டங்களில் பிரபாகரன் மீது பல குற்றவழக்குகள் போடப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படையும் வந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போதெல்லாம், தமிழகத்திலோ, வேறு நாட்டிலோ தான் பிரபாகரன் பதுங்கியிருந்தார் என்பதும் ஆதாரமாக காட்டப்படுகிறது. முதன் முறையாக, 1970களில் தான் பிரபாகரன், குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டார். அப்போது< யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா கொலை தொடர்பாக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அப்போது, தமிழகத்திற்கு தப்பி ஓடி விட்டார். கடந்த 1986ல், தமிழீழ தனி நாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு தரவில்லை. அதை உணர்ந்த பிரபாகரன், தமிழகத்தில் தான் இருந்தால் கைது செய்யப்படலாம் என்று கருதி, அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு ஓட்டம் பிடித்து தலைமறைவாகி விட்டார். கடந்த 1987 அக்டோபர் முதல் 1990 மார்ச் வரை இலங்கையில் இந்திய அமைதிப்படை தங்கி, புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது. இந்திய அமைதிப்படை இருந்தவரை சிக்காமல் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அந்த படை போனதும், இலங்கை ராணுவத்தை தாக்க ஆரம்பித்தார்.

இலங்கையில் மாஜி அதிபர் பிரேமதாசா கொலை, இந்தியாவில் ராஜிவ் கொலை என்று முக்கிய கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 1996ல், கொழும்பில் உள்ள மத்திய வங்கியில் குண்டு வெடிப்பு நடத்திய வழக்கில் அவருக்கு 200 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை கோர்ட் அளித்துள்ளது. “அவரை பிடித்துத்தர வேண்டும்’ என்று “ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச போலீசும் வலை விரித்துள்ளது. இப்படி பல கட்டங்களில் அவர் சிக்கியதும் இல்லை; மற்ற புலிகளை போல, சயனைடு விஷம் குடித்து தற்கொலை செய்யவும் நினைக்கவில்லை. பதுங்கி தான் இருந்தார் அல்லது ஓட்டம் பிடித்திருக்கிறார். இப்படி அடுக்கடுக்காக தகவல்களை கொழும்பில் உள்ள இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், கொழும்பில் உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், பிரபாகரன் பிடிபடும் விஷயத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், இலங்கை ராணுவம் திடமான உறுதியுடன் உள்ளது. “எங்களை பொறுத்தவரை, பிரபாகரன் தப்பலாம் என்று எண்ணி ஏற்கனவே தரை, கடல் வழிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். அதனால், அவர் தப்ப வாய்ப்பில்லை. அவர் கண்டிப்பாக 5 ச.கி.மீ., பரப்புக்குள் தான் இருக்க வேண்டும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.