முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் கடும் தாக்குதல்: 58 சிறுவர்கள் உட்பட 278 தமிழர்கள் பலி; 298 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவரும் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை உறக்கத்தில் மக்கள் இருந்தவேளையில் சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணை மற்றும் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

இரட்டைவாய்க்கால், சாளம்பன், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டைப்பனையடி ஆகிய பகுதிகளே சிறிலங்கா படையினரின் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் காயங்களுடன் நிலத்தில் கிடந்தவாறு பலர் அவதிப்படுகின்றனர் எனவும் ‘புதினம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளையில் நோயாளர்களை ஏற்றிச்செல்லும் கப்பலில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு வந்து அனைத்துலக செஞ்சிலுவை சங்கக் குழுவின் அதிகாரிகள் நிலைமைகளை பார்வையிட்டனர்.

பார்வையிட்ட பின்னர் பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு சென்றதும் பிற்பகல் 3:00 மணியளவில் மருத்துவமனை மீது ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு இரத்த வங்கி அறுவைச் சிகிச்சைக்கூட பகுதியில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் 30 நோயாளர்கள் மேலும் காயமடைந்தனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கடற்படை பீரங்கித்தாக்குதலில் 10 பேர் துறைப் பகுதியில் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் நோயாளர்களை ஏற்றும் ஒழுங்கமைப்பில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க சமாசத்தின் பொருளாளர் சதாசிவம் நாகராசாவும் உயிரிழந்தார்.

மேலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் பல பகுதிகளில் மீட்கப்படாமல் சிதறி கிடப்பதாக ‘புதினம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கனரக போர்க் கலங்களை பயன்படுத்தமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நாடுகளுக்கு உறுதியளித்திருந்தது.

ஆனாலும் இத்தாக்குதல்கள் கனரக போர்க் கலங்களை மக்கள் மத்தியில் சிறிலங்கா படையினர் பயன்படுத்துகின்றனர் என்பதை வெளிக்காட்டுகின்றது என்றும் ‘புதினம்’ செய்தியாளர் கூறுகின்றார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.