புலிகளின் தலைவர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடல்வழி நகர்வை மேற்கொண்டிருக்கலாம்: இராணுவத்திற்கும் கடற்படைக்கும் இடையே கருத்து மோதல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகள் குறித்து இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளை கட்டுப்படுத்த கடற்படை தவறியிருப்பதாக இராணுவத் தலைமைக்கு இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ஏலவே முறையிட்டிருந்தனர்.

இதனையடுத்து கடற்படையினருக்கு என அதிசக்தி வாய்ந்த கதுவீகள் (ராடார்) பொருத்தப்பட்ட படகுகளும் அதிவேக படகுகளும் கொள்வனவு செய்யப்பட்டு கடலில் கடற்படையின் பலம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு வலயங்களைக்கொண்ட கடல்வழி பாதுகாப்பு நடைமுறையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் தற்போது இராணுவ உயர்மட்டத்திற்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இருப்பிடம் குறித்தே இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் தற்போதைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கடல்வழி நகர்வை கட்டுப்படுத்த முடியாமல் அவரை கடற்படையினர் கோட்டைவிட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசனம் எழுப்பப்பட்டுள்ள போதும் அந்த குற்றச்சாட்டை கடற்படை அடியோடு மறுத்துள்ளது.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடல்வழி நகர்வை மேற்கொண்டிருக்கலாம் என களத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடல்வழியாக அவர் எந்தவொரு நகர்வையும் செய்யமுடியாது என்றும் தமது பாதுகாப்பு அத்தகையதே என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொழும்பில் நேற்றைய நாள் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில் –

கடற்படையினர் அதிசக்தி வாய்ந்த தொழிநுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளையே முல்லைத்தீவில் மேற்கொண்டுள்ளனர். கடல்வழியாக புலிகள் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் கடல் வழியாக எந்த நகர்வையும் மேற்கொள்ள கடற்படை இடமளிக்காது என்று தெரிவித்திருந்தார்.

கடற்படையினரின் இந்த கருத்து இராணுவத் தலைமைக்கும் கடும் விசனத்தை ஏற்படுத்தி அது வெளிப்படையான கருத்து மோதல்களாக வெளிப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு இன்று வெள்ளிக்கிழமை சிங்கள ஊடகவியலாளர்களை இராணுவ உலங்குவானூர்தியில் அழைத்துச் சென்ற இராணுவத்தினர், அங்கு ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

அச்சந்திப்பில் 58 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்படையினர் மீதான தனது விசனத்தை கொட்டித் தீர்த்தார்.

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பிரபாகரன் நகர்வை மேற்கொண்டிருக்கலாம் என நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ள அவர், கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை, புலிகிளின் தலைவர் பொட்டு அம்மான், பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி ஆகியோர் தொடர்ந்தும் முல்லைத்தீவிலேயே இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கடல்நகர்வு குறித்த இத்தகைய முரண்பாடான தகவல்களாலும் கருத்து மோதல்களாலும் இராணுவத் தலைமைக்கும் கடற்படைக்கும் இடையிலான முறுகல் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.