இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்த மறுத்து வருவதன் பின்னணியில் ‘றோ’: நெடுமாறன் குற்றச்சாட்டு

இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணியில் ‘றோ’ இருப்பது அம்பலமாகியிருக்கின்றது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் படுகொலை செய்ய ‘றோ’ உளவுத்துறைச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகியிருக்கின்றது.

கடந்த காலத்திலும் பல முறை பிரபாகரனை ஒழித்துவிட ‘றோ’ உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித் திட்டத்தை விடுதலைப் புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, இச்சதியில் ஈடுபட்டுள்ள ‘றோ’ அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தச் சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும். இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.