பிரபாகரன் இருக்குமிடம் தெரியும்-ராணுவ தளபதி

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்குமிடம் தெரியும் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில்,

இப்போது புலிகள் வெறும் 12 சதுர கி.மீ. சுற்றளவுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள். பெருமளவு விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்று விட்டோம். இப்போது சுமார் 1200 புலிகளே மிச்சமுள்ளனர். இதில் 300 முதல் 400 பேர் கடைசி வரை போராடும் தீவிரமானவர்கள். மற்ற 700 பேர் வலுக்கட்டாயமாக போராட வேண்டிய நிலையில் உள்ளவர்கள்.

பிரபாகரன் இருக்கும் இடம் தோராயமாக எங்களுக்குத் தெரியும். அவரை அழிப்போம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. அவரை விரைவில் அழித்து விடுவோம்.
போர் பகுதியில் உள்ள மக்களுக்கு போதுமான உணவு, மருந்துகள் போய் சேர்ந்துவிட்டன. இதனால் இப்போதைக்கு மேலும் தாற்காலிக போர் நிறுத்தம் தேவையில்லை என்றார்.

இந் நிலையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் உள்ள வளையன் மடம் பகுதியைப் பிடிக்க ராணுவம் முன்னேறி வருகிறது. புதுமாத்தளைக்கும் வளையன் மடத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த தமிழர்கள் வெளியேறி விட்டனர். எனவே இப் பகுதியில் ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது.

வளையன் மடத்தில் இருந்து முள்ளி வாய்க்கால் என்ற இடம் வரை 8 சதுர கிலோ மீட்டர் பகுதியில் சுமார் 2 லட்சம் தமிழர்கள் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவும் செயற்கைக் கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

இங்கு மக்களோடு மக்களாக விடுதலைப் புலிகளும் கலந்து போரிட்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக தமிழர்கள் மீது ராணுவம் சரமாரியாக குண்டு வீசி வருகிறது. பீரங்கிகள், கனரக துப்பாக்கிகள் மூலம் குண்டு மழை பொழிகிறது. ரசாயன குண்டுகளையும் வீசி வருகிறது.

இந் நிலையில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான இளம்பரிதி கூறுகையில்,

போர் பகுதியில் தங்கி இருக்கும் தமிழர்களை சிங்கள ராணுவம் பிடித்து செல்ல முயற்சித்ததும் அவர்களில் ஏராளமான தமிழர்கள் தப்பி விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வளைஞர் மடம், முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் வந்துள்ளனர். எங்கள் பகுதிக்குள் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர் என்றார்.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.