இரண்டு நாள் போர் நிறுத்தத்தால் எந்தப் பலனும் இல்லை: சிவ்சங்கர் மேனனிடம் த.தே.கூ. பிரதிநிதிகள் விளக்கம்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்த இரண்டு நாள் போர் நிறுத்தத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பதை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இந்தக் காலப்பகுதியில் மட்டும் 200 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போதைய நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் குறுகிய பகுதியில் இரண்டரை லட்சம் மக்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தற்போதைய நிலையில் அவர்களுடைய உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமானால் உடனடியாக போர் நிறுத்தம் செய்வது அவசியம் என்பதையும் வலியுறுத்தினர்.

இந்தியத் தலைநகர் புதுடில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனனை இன்று வியாழக்கிழமை சந்தித்து வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக விளக்கியுள்ளனர்.

இந்தியப் பிரதமரின் இல்லத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு தொடங்கிய சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் புதுடில்லி வந்துள்ள கூட்டமைப்பின் தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

வன்னி நிலைமைகள், மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பாக விளக்கிக்கூறிய சம்பந்தன், உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கம் கொடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாட்களுக்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் அதனால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்த சம்பந்தன், இந்தக் காலப்பகுதியில் மட்டும் 200 அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதனால் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட சம்பந்தன்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டரை லட்சம் மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மிகக்குறுகிய பகுதியான பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர். அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பளிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய நிலைமையில் அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. உடனடியாகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் மட்டும்தான் இந்தப் பகுதியில் உள்ள தமிழர்களைப் பாதுகாக்க முடியும்.

இதனால் சிறிலங்கா படைகள் மேற்கொண்டுவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இந்திய வெளிவிவகாரத்துறை செயலரிடம் வலியுறுத்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளருடனான சந்திப்பு மனநிறைவளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவித்த அவர், இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.