புத்தள கிராமத்தில் மீண்டும் தாக்குதல்: 3 கிராமவாசிகள் பலி

சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகலவில் உள்ள புத்தள பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிங்களக் கிராமவாசிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களுக்குள் இங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கின்றது.

நேற்று திங்கட்கிழமை இரவு புத்தளவில் உள்ள கல்டம்எரா என்ற கிராமத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகளால் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து மொனறாகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே பகுதியில் நேற்று முன்நாள் இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

ஆறு பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்ட அதேவேளையில் மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

புத்தல, மஹகொடயாய கிராமத்துக்குள் நேற்று முன்நாள் இரவு 7:00 மணியளவில் திடீரெனப் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலின்தே இவர்கள் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்கள் வயலில் வேலை செய்து விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திருப்பிக் கொண்டிருந்த போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இராணுவத்தினரும், காவல்துறையினரும் இந்தக் கிராமத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு மீண்டும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இதனால் கிராமவாசிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.