அவுஸ்திரேலிய பிரதமரின் இல்லம் முன்பாக தமிழர்கள் முற்றுகைப் போராட்டம்: இரவு இரவாக தொடர்கிறது

அவுஸ்திரேலியாவில் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர்கள் சிட்னியில் உள்ள அந்நாட்டுப் பிரதமரின் இல்லத்துக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தைக் கலைப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததையடுத்து இந்தப் போராட்டம் இரவு இரவாக தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கிரிபில்லி என்ற இடத்தில் உள்ள பிரதமரின் சிட்னி இல்லத்தின் முன்பாகவுள்ள கிரிபில்லி சந்தியையும், கராபெல்ல வீதியையும் தடைசெய்யும் வகையிலேயே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்கள் சகிதம் குடும்பம் குடும்பமாக வந்த பெருந்தொகையான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக மூன்று இளைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை நேற்று சனிக்கிழமை தொடங்கியதனையடுத்து பொதுமக்களின் மறியல் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது.

பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டு இந்தப் போராட்டத்தை பொதுமக்கள் நடத்தி வருகின்ற போதிலும் பிரதமர் அங்கு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இந்த இளைஞர்கள் மேற்கொண்டு வரும் அதேவேளையில் பொதுமக்களின் வீதி மறியல் போராட்டமும் தீவிரமடைந்திருப்பதால் காவல்துறையினரும் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றிரவு 10:30 நிமிடமளவில் கலகம் அடக்கும் காவல்துறையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டதுடன், போராட்டத்தை மேற்கொண்டுள்ளவர்கள் ஐந்து நிமிடத்துக்குள் கலைந்து சென்றுவிட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருந்தபோதிலும், இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாத பொதுமக்கள் பலமாக முழக்கங்களை எழுப்பியதுடன், தமது கைகளைக் கோர்த்தவாறு வீதிகளில் அமர்ந்துவிட்டனர். இதனால் அவர்களை வெளியேற்றும் காவல்துறையினரின் முதலாவது முயற்சி தோல்வியடைந்தது.

போர் நிறுத்தம் ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கும் செய்தி இரவு 11:00 மணியளவில் பி.பி.சியில் வெளியாகியது.

இச்செய்தி போராட்டத்தை கைவிட்டு தமிழர்கள் கலைந்து செல்வதற்கு வழிவகுப்பதாக அமையும் எனக் கருதிய காவல்துறையினர், செல்லிடப்பேசியை பயன்படுத்தி இணையத்தளத்தில் அது தொடர்பான செய்தியைப் பெற்று அதனை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடையே காண்பித்துள்ளனர்.

இருந்தபோதிலும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

“நாம் இங்கு சண்டையிடுவதற்காக வரவில்லை. நாம் எமது குரல்களை எழுப்புவதற்காகவே இங்கு வந்துள்ளோம். தயவு செய்து அதற்கு அனுமதியுங்கள்..” என தமிழர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரவு 11:45 நிமிடமளவில் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக மருத்துவர் வாசுகி டிலிலியோ காவல்துறையினருடன் பேச்சுக்களை நடத்தியதையடுத்து போராட்டத்தை காலவரையறையின்றித் தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய மருத்துவர் வாசுகி டிலிலியோ, “நாம் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம். நாம் இங்கேயே இருப்போம். பிரதமரின் இல்லத்துக்குள் நாம் பிரவேசிக்கப்போவதில்லை. காவல்துறையினருக்கு நாம் இடையூறாக இருக்கப்போவதில்லை. அவர்களும் இங்கிருந்து எம்மை வெளியேற்றமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கலகம் அடக்கும் படையினரும், ஏனைய காவல்துறையினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பிரதமரின் இல்லத்துக்குள் அனுப்பப்பட்டனர்.

இரவு இரவாக இந்தப் போராட்டத்தை தாம் மேற்கொள்ளப்போவதாக இப்பகுதியில் கூடியிருக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு 11:30 நிமிடத்துக்குப் பின்னர் போராட்டத்தை மேற்கொள்பவர்களைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ள காவல்துறையினர் இந்தப் போராட்டத்தில் வேறு எவரும் வந்து கலந்துகொள்ள முடியாத வகையில் தடை செய்திருக்கின்றனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.