வங்க கடலில் புதிய காற்றழுத்தம்

சென்னை: “வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாத துவக்கம் முதலே, அக்னி வெயில் போல் சுட்டெரித்து வருகிறது. நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பூதப்பாண்டி மற்றும் மணிமுத்தாரில் 11 செ.மீ., மழை பதிவாகியது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரியில் 10, பாளையங்கோட்டையில் 8, அம்பாசமுத்திரம், நாகர்கோவில், தக்கலை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடியில் 7, பட்டுக்கோட்டை 5, மணியாச்சி, திருச்செந்தூர், ராதாபுரத்தில் 4, பேச்சிப்பாறை, கோவில்பட்டி, சாத்தான்குளம், போடிநாயக்கனூரில் 3 செ.மீ., மழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “”தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யும்,” என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.