புலிகளுடனேயே பேச்சு; ‘முழுமையான பிரிவினை’ பரிசீலிக்கப்பட வேண்டும்: அமெரிக்க அரச பிரதிநிதிகளிடம் அமெரிக்க தமிழர்கள்

வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாகவும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாகவும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சர்ட் பெளச்சருக்கும் இடையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்நாள் புதன்கிழமை சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தொலைக்காணொலி உரையாடல் (Video conferencing) ஊடாக இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

தமிழர் தாயகத்தில் உள்ள தமது உறவுகள் தொடர்பாக அமெரிக்க தமிழர்கள் கொண்டுள்ள அதிகரித்த உணர்வுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட றிச்சர்ட் பெளச்சர், நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இப்பேச்சுக்களின் போது வன்னியில் உருவாகியுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் உரையாடிய அதேவேளையில், அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாக பெளச்சர் உரையாடினார்.

வன்னியில் உள்ள மக்களுக்காக அமெரிக்காவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டும் உதவிகள் தொடர்பாக அமெரிக்க தூதுவர் முதலில் விளக்கிக்கூறினார். இங்குள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தில் 60 வீதமானவை உலக உணவுத் திட்டத்தின் மூலமாகவே வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், காயமடைந்த 4 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதேவேளையில் மருந்துப் பொருட்களை அனுப்பிவைப்பதில் காணப்படும் நெருக்கடிகள் தொடர்பாகவும் அவர் விளக்கினார்.

பாதுகாப்பு வலயத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இருப்பதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள், இந்தப் பகுதிக்கு மருந்துப் பொருட்களை நேரடியாக அனுப்பிவைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமெரிக்க தமிழர்கள், கண்ணிவெடிகளை அகற்றுவதில் அதிகளவு அக்கறை காட்டும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு மீள்குடியேற்றத்தைத் தாமதப்படுத்தும் அதேவேளையில் அந்தப் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக சிறிலங்கா அரசாங்கம் மாற்றுவதற்கும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும் வழிவகுத்துவிடலாம் எனவும் எச்சரித்தனர்.

உடனடி போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இருந்து தமிழர்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிப்பார்களா என அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்ட போது பதிலளித்த தமிழ்ப் பிரதிநிதிகள், இது தொடர்பாக அங்குள்ள தமிழர்களே முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தி ஐ.நா. அமைப்புக்களின் பாதுகாப்புடன் ‘போரற்ற பிரதேசம்’ ஒன்றை உருவாக்கி அங்கு மக்களை இருக்க விட்ட பின்னரே, தமிழர்களிடம் விடுதலைப் புலிகளுடன் இருக்கப்போகின்றார்களா அல்லது அல்லது அரசங்க முகாம்களுக்குள் செல்லப்போகின்றார்களா என்பதைக் கேட்க வேண்டும் எனத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்னர்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசியல் தீர்வு ஒன்றின் அவசியம் தொடர்பாக றிச்சர்ட் பெளச்சர் வலியுறுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்குபற்றுதல் இல்லாமல் எந்தவொரு நிரந்தரமான தீர்வையும் எட்டிவிட முடியாது எனத் தெரிவித்த தமிழ்ப் பிரதிநிதிகள், ‘முழுமையான பிரிவினை’ என்பதும் ஒரு தீர்வாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு கூட்டாட்சி முறை ஒரு மாற்றுத் திட்டமாக அமையலாம் எனவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறான ஒரு அரசியல் தீர்வு தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், இவ்வாறான அரசியல் தீர்வு முயற்சிகளில் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.