அரசாங்கம் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை மதிக்க வேண்டும்: இணைத்தலைமை நாடுகள்

இலங்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, இணைத்தலைமை நாடுகள் இன்று காலை விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனிதாபிமான நிலவரங்கள் குறித்து ஆராயும் பொருட்டு, இந்த கலந்துரையாடலை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரிச்சர்ட் பவுச்சர் ஒழுங்கு செய்திருந்தார்.

மோதல் தவிர்ப்பு பிரதேசத்தின், நிலவரம் குறித்து இதன் போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டிருந்தாக அமெரிக்க ராஜாங்க செயலகம் தெரிவித்துள்ளது.

இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

மோதல் பிரதேசங்களில் உள்ள மக்களது நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்வதுடன், அவர்களை பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வர இரு தரப்பினரும் இடமளிக்க வேண்டும் என இதன் போது கோரியுள்ளனர்.

அத்துடன் அரசாங்கம், பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினை, மதித்து, தாக்குதலை மேற்கொள்ளாதிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த பிரதேச மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான நடவடிக்கைகளை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்த வெள்ளம் மிக்க இந்த யுத்தத்தினை நிறுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும், இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போது, ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.