வடகொரியா மீது நடவடிக்கை வருமா?;ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது குறித்து விவாதிக்க ஐ.நா.,பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று துவங்கியது. வடகொரியா,”டேபோடாங்-2″என்ற செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியதாகத் தெரிவித்தது.”செயற்கைக்கோள் சோதனை”என்ற பெயரில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனையை நடத்தியதாக தென்கொரியாவும்,ஜப்பானும் குற்றம் சாட்டியுள்ளன.
வடகொரியா ஏவுகணைச் சோதனை செய்யப்போவதை அறிந்த தென்கொரியாவும்,ஜப்பானும்,வடகொரியா அருகே கடல் பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்தன.அந்தக் கப்பலில் உள்ள அதி சக்தி வாய்ந்த செயற்கைக்கோள் கேமரா மூலம் வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனையை இந்த நாடுகள் படம் பிடித்துள்ளன.

வடகொரியா,”டேபோடாங்-2″என்ற ஏவுகணையைச் செலுத்தி சோதனை நடத்தியுள்ளதன் மூலம் ஐ.நா.,பாதுகாப்பு சபை தீர்மானத்தை மீறியுள்ளது.வடகொரியாவின் இந்தச் செயல் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது.சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீறி வரும் வடகொரியா,தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்கிறதென அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே,வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது குறித்து விவாதிக்க ஐ.நா.,பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டம் நேற்று துவங்கியது.ஐ.நா.,சபையின் அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ் குறிப்பிடுகையில்,”வடகொரியா மீது அனைத்து நாடுகளும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது”என்றார்.நேற்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

Source & Thanks : newsonews.com

Leave a Reply

Your email address will not be published.