கொழும்பு வந்துள்ள ஐ.நா. பிரதிநிதி வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோர் நிலை தொடர்பாக ஆராய்வார்

நான்கு நாள் பயணத்தினை மேற்கொண்டு கொழும்புக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளின் பிரதிநிதி வோல்டர் கீலின் வவுனியாவுக்கு பயணம் செய்து வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகள் தொடர்பாக முக்கியமாக ஆராய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கொழும்பு வரும் இவர், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றன என்பதையிட்டும் அவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் அரசாங்க உயர் அதிகாரிகளுடன் விரிவான முறையில் ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 6 ஆம் நாள் வரையில் சிறிலங்காவில் தங்கியிருக்கும் அவர், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.வின் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பொது அமைப்புக்களின் பிரமுகர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.

வவுனியாவுக்கும் செல்வதற்கு திட்டமிட்டுள்ள இவர், அங்குள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ள வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் திட்டமிட்டுள்ளார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.