சிறிலங்கா அரசு செய்ய வேண்டியது போர் நிறுத்தத்துக்கு உடன்படுவதும் பேச்சுக்களை நடத்துவதுமே: ரணத் குமாரசிங்க

சிறிலங்கா அரசாங்கம் செய்ய வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்துக்கு உடன்படுவதும் பேச்சுக்களை நடத்துவதுமே. இதுவே அறிவுபூர்வமானது. அத்துடன் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் கல்விப் பிரிவுச் செயலாளரும், ஊடகவியலாளருமான ரணத் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுவிற்சர்லாந்து நாட்டுக்கு வருகை தந்திருந்த ரணத் குமாரசிங்க அந்நாட்டில் இருந்து வெளிவரும் ‘நிலவரம்’ வாரமிருமுறை இதழுக்கு வழங்கிய சிறப்புச் நோ்காணலிலேயே இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அவரது நேர்காணலின் முழு விபரம்:

விடுதலைப் புலிகள் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஒன்றுக்கு தாம் தயார் எனத் தெரிவித்துள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

தற்போதைய அரசாங்கம் சிங்களப் பேரினவாதிகளின் சதிவலையில் சிக்கியுள்ளது. தற்போது இந்தச் சக்திகள் பிசாசை வெளியே விட்டுள்ளன. இந்தப் பிசாசுகளைத் தடுத்து நிறுத்த முயற்சித்தால், அவை அரச தலைவர்களின் கழுத்தை முறிக்கும்.

அவர்கள் மிகப்பெரிய மடத்தனத்தைப் புரிந்துள்ளார்கள். அவர்கள் போரைத் தொடங்கிய வேளையில் அதில் இருந்து வெளியேறுவதற்கான வழி வகைகளையும் சிந்தித்திருக்க வேண்டும். அடிப்படையில் இந்த போர் கூட அரசியல் ரீதியான போருமே.

ஆனால், இந்த போர்ப் பாதையில் சில பின்னடைவுகளைச் சந்தித்த வேளைகளில் முன்னைய தலைவர்கள் ஒப்பந்தங்களைச் செய்துள்ளார்கள்.

ஆனால் தற்போது உள்ளவர்களிடம் அந்த வகையான தந்திரோபாயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் சாதாரணமாக போரைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

தற்போதைய நிலையில் அரசாங்கத்தை நடாத்திச் செல்லும் பேரினவாத போர்ப்பிரியர்களால் இவ்வாறான அரசியல் முடிவுகளை எடுக்க முடியாது. அவர்களால் முடிந்தது எல்லாம் மேலும் உக்கிரமாக போரை முன்னெடுப்பது மாத்திரமே. அவர்களுக்கு நிறுத்துவதற்குரிய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு போரை நிறுத்த முன்வராமைக்கு மற்றொரு காரணமும் இருக்கின்றது. அதாவது உலக வல்லரசுகள் சிறிலங்காவை அவ்வாறு நிர்ப்பந்திக்கவில்லை. அவர்கள் போர் நிறுத்தம் தொடர்பாக கதைக்கும் போதிலும் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் ஒரே தராசிலேயே வைக்கின்றனர்.

அதேவேளையில் “நாங்கள் தமிழர்களுக்கு எதிராகச் சண்டை பிடிக்கவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே சண்டை பிடிக்கின்றோம்” எனும் வாதத்தை அரசாங்கம் முன்வைக்கின்றது. அந்த வாதத்தை அவர்களால் தொடர முடிகின்றது.

கடந்த ஐந்தாறு தசாப்தங்களை முன்னோக்கிப் பார்த்து உலக வல்லரசுகள் அரசியல் முடிவுகளை எடுக்குமானால் சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்ததை அவர்கள் ஜனநாயக ரீதியாக மேற்கொண்ட போராட்டங்களை நசுக்கியதைக் காண முடியும்.

1958 இல் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு முன்பாக தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட போது சிங்களக் காடையர்களும் காவல்துறையினரும் அவர்களைத் தாக்கினார்கள். இதேபோன்றே தமிழர்கள் அகிம்சைப் போராட்டங்களை மேற்கொண்ட போது எல்லாம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்தது.

இதன் போது தமிழ்த் தலைவர்களுக்கு சிங்களத் தலைவர்களிடம் பேரம் பேசும் சக்தி இல்லாததைத் தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொண்டார்கள். செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ஒவ்வொரு முறையும் சிங்களத் தலைவர் முறித்துக்கொள்ளும் போது அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

1972 இல் கொல்வின் ஆர்.டி. சில்வா புதிய அரசியலமைப்பை வரைந்த போது சிங்களத்துக்கு மட்டுமன்றி பௌத்த சமயத்துக்கு அரச மதம் என்ற அந்தஸ்த்தை வழங்கினார். தமிழ்த் தலைவர்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தபோது அது நிராகரிக்கப்பட்டது. அது தொடர்பாக கதைப்பதற்குக்கூட அவர்கள் தயாராக இருக்கவில்லை.

இந்த நிலையில் தலைவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, படித்த வாலிபர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பைத் தமது கரங்களில் எடுத்துக் கொண்டார்கள். இளைஞர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட முனைவார்களாயின் அது தமிழர்களாயினும் சிங்களவராயினும் உலகின் வேறு இனத்தவராயினும் அப்போராட்டம் ஆயுதப் போராட்டமாகவே பரிணமிக்கும்.

சிறிலங்காவைப் பொறுத்தவரை ஜே.வி.பி. கிளர்ச்சி தொடர்பில் எமக்கு 2 அனுபவம் உள்ளது. அவர்கள் தேசியப் பிரச்சினைக்காக ஆயுதம் ஏந்தாத போதிலும் பொருளாதாரக் காரணங்களுக்காக, தொழில் இன்மைக்காக ஆயுதமேந்தினார். அவர்களால் முதலாளித்துவ வரன்முறைக்குள் தாம் விரும்பியவற்றைப் பெற முடியவில்லை. அவர்கள் அந்த வரன்முறைக்கு வெளியே இருந்தார்கள். அவர்கள் சமூகத்தின் தூசுகளாக மாறியிருந்தார்கள். அதனால் அவர்கள் அந்தச் செயன்முறைக்கு எதிராகப் போராடினார்கள். அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமை ஒரு இயல்பான நிகழ்வு.

தமிழ் இளைஞர்களின் நிலையும் அதுவே. தமது எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு இலக்கான போது ஆயுதம் ஏந்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. இது சரியான வழிமுறையல்ல. என எம்மால் விமர்சனங்களை முன்வைக்க முடியும். இதற்கூடாக அவர்களால் உண்மையான வெற்றியைப் பெறமுடியாது எனக் கூற முடியும். ஆனால், அவர்களால் வேறு என்ன தான் செய்ய முடியும்?

ஒரு பண்டிதராக, மார்க்சிய பண்டிதராக எம்மால் அதனை விமர்சனத்துக்கு ஆளாக்க முடியும். ஆனால், அதனால் எதுவித பயனும் விளையப் போவதில்லை. அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கினால் அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடக்கூடும். இந்த இளைஞர் இயக்கத்தை முற்றாக அழித்தொழிக்கப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது. அவர்களை அழித்த பிற்பாடு தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் கூறுகின்றது.

உண்மையிலேயே அரசாங்கம் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க விரும்பியிருந்தால் எதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் வரை காத்திருந்தது? ஏன் 50-களில் 60-களில் 70-களில் அதனைச் செய்யவில்லை? சந்திரிகா பதவிக்கு வந்த பிற்பாடு ஏன் அதனைச் செய்யவில்லை? அவர் சிங்கள மக்களில் 63 வீதமானோரின் வாக்குகளைப் பெற்றிருந்தார்.

யாழ். குடாநாட்டில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறப் போவதாக அப்போது அவர் அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப் போவதாக அறிவித்திருந்தார். 63 வீதமான சிங்களவர்களும் சந்திரிகா அதனைச் செய்வார் என நினைத்தே வாக்களித்தனர். ஆனால் அவர் உண்மையில் என்ன செய்தார்? எதுவுமே இல்லை.

எம்மைப் போன்ற அபிவிருத்தியடையாத நாடுகளில் உள்ள ஆளும் பூர்ஸ்வா வர்க்கத்துக்கு இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வல்லமை கிடையாது. அவர்கள் எப்போதும் பெரும்பான்மை வாக்குகளிலும் பெரும்பான்மை பலத்திலுமே தங்கியிருப்பார்கள்.

நாங்கள் ஏற்கனவே பார்த்ததைப் போன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் தேசியப் பிரச்சினை மட்டுமன்றி தொழில் இன்மை உயர்கல்விப் பிரச்சினை போன்றவையும் இருந்தன.

1960-களின் பிற்பகுதியிலும் 1970-களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊடாக உத்தியோகங்களை வழங்கும் ஒரு நடைமுறையினை அவர்கள் அமுல் செய்தார்கள். உத்தியோகம் தேவையானால் நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை தேவை. இந்த அதிகாரம் எத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தது? அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அந்த அதிகாரம் இருந்தது. சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள இளைஞர்களுக்கு – தமது ஆதரவாளர்களுக்கே – பதவிகளை வழங்கினார்கள். தமிழ் இளைஞர்களுக்கு எந்தவித வாய்ப்பும் கிட்டவில்லை.

அடுத்து தரப்படுத்தல் வந்தது. க.பொ.த. உயர்தரம் சித்தி எய்திய மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வாய்ப்புக் கிட்டவில்லை. பூர்ஸ்வாக்களால் தங்களுக்கென தனியான பல்கலைக்கழகங்களை உருவாக்கவும் முடியவில்லை.
தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவர்கள் இவ்வாறு கூறினார்கள். நீங்கள் சிங்களவராக இருந்தால் 148 புள்ளிகளுடன் மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெறமுடியும்.

ஆனால், நீங்கள் தமிழராக இருந்தால் 157 புள்ளிகளைப் பெற வேண்டும். இது சிங்களவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காகச் செய்யப்பட்ட முயற்சி பொறியியல் பிரிவுக்கும் இதே நடைமுறை தான். இதனால் மேற்படிப்பு வாய்ப்புக்கள் தமிழர்களுக்குக் குறைவடைந்தன.

விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கத்தினால் நசுக்கிவிட முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

சில வேளைகளில் அவர்களால் முடியக்கூடும் ஏனெனில், இது சமாந்தரமற்ற போர். இதனை நாங்கள் தொடச்சியாகக் கூறி வருகின்றோம். சிங்கள இராணுவம் மிகப்பெரியது. நவீன ஆயுதங்களைப் பெறுவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.

அதேவேளையில் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் சிறிலங்கா இராணுவத்தோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையினர். சிறிலங்கா இராணுவத்தின் அளவில் 5, 6 வீத எண்ணிக்கையிலேயே அவர்கள் உள்ளனர்.

தற்போதைய நிலையில் இந்திய அரசின் உதவியுடன் புலிகளுக்கான ஆயுத விநியோகங்களை அரசு முடக்கியுள்ளது. புலிகளின் நிதிச் சேகரிப்பை முடக்குவதற்கு உலக நாடுகள் உதவியுள்ளன. புலிகளின் நிதிச் சேகரிப்பு இதனால் குறைந்து விடவில்லை என்ற போதிலும் கூட இது புலிகளுக்கு சில நெருக்கடிகளைத் தந்துள்ளது. பிரசார ரீதியிலும் இது பின்னடைவே. அவர்களில் தொலைக்காட்சிச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

புலிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய நிலையில் அவர்களைத் தோற்கடிப்பதற்கான சந்தர்ப்பம் அரசுக்கு அதிகமாகவே உள்ளது. அரசின் நோக்கம் புலிகளைத் தோற்கடிப்பது மட்டுமன்றி புலிகளின் தலைமையை அழிப்பதுவுமே.

அதில் அரசாங்கம் வெற்றி பெறும் என எடுத்துக்கொண்டால் கூட தமிழ்த் தேசத்தை நோக்கிய போராட்டத்தை இல்லாமல் செய்துவிட முடியாது. பிரபாகரன் கொல்லப்பட்டால் பிரபாகரனை விட பல மடங்கு பலமான மற்றொரு சக்தி தமிழ்த் தேசியப் போராட்டத்தை வலுப்படுத்த உதயமாகும். இதற்கு ஊடாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அவர்கள் நினைப்பது மிகவும் முட்டாள்த்தனமானது.

முன்பொரு தடவை கூறும்போது விடுதலைப் புலிகளை நாம் தோற்கடித்தாலும் கூட கெரில்லாப் போர் இன்னும் 20 வருடங்களுக்குத் தொடரும் என்றார் சரத் பொன்சேகா.
தற்போது இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கும் என்றுள்ளார். அவர்களுக்கும் யதார்த்தம் புரிகின்றது. ஆனால் தம்மை வெற்றி பெற்ற மனிதர்களாகக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புகின்றார்கள்.

உண்மையிலேயே அவர்கள் செய்ய வேண்டியது விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்துக்கு உடன்படுவதும் பேச்சுக்களை நடாத்துவதுமே. இதுவே அறிவுபூர்வமானது. அத்துடன் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொள்ள வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வுக்குத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். இந்தக்கோரிக்கையை முன்வைத்த போது இது என்ன கேள்விப்படாத விடயமாக இருக்கின்றதே என நாங்களும் கூட புலிகளை விமர்சனம் செய்திருந்தோம். இது புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்துக்குச் செய்யும் துரோகம் எனக் கூடக் கூறியிருந்தோம்.

அதன்பிறகே அனைத்துலக சமூகத்துடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே புலிகள் இவ்வாறு தெரிவித்திருந்தமையே எங்களால் உணர முடிந்தது. தொடர்ந்து அவர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார யோசனையை முன்வைத்தார்கள். அது ஒரு நல்ல விடயம். ஆனால், எவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது நல்ல விடயம் எனப் புகழ்ந்த போதிலும் அதனைப் பரிசீலிக்க முன்வரவில்லை.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனை என்பது விடுதலைப் புலிகள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதற்கு ஒப்பானது. ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை.

சிங்களத் தலைவர்கள் அதனைக் கவனத்தில் கூடக் கொள்ளவில்லை. இன்றும் கூட அதன் அடிப்படையில் பேச்சுக்களை நடாத்தி பிரச்சினையைத் தீர்க்க முடியும். மக்கள் மகிழ்ச்சியடையவர். இன்றுள்ள நிலையில் மாகாண சபைகளை விட சற்று அதிகாரம் கூடிய தீர்வொன்றை புலிகள் சிலவேளை ஏற்றுக்கொள்ளக்கூடும். இதன் மூலம் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும்.

தங்களது கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை தொடக்கம் முதலே ஆதரித்து வருகின்றது. கடந்த காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்களாக விளங்கிய சோவியத் ஒன்றியம், சீனா போன்ற நாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உதவின. ஆனால் எமது விடயத்தில் அமெரிக்க உட்பட முதலாளித்துவ நாடுகள் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதத்திற்கு எடுக்க முயற்சித்த போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்களாகக் கருதப்பட்ட ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் அதனை எதிர்த்ததாக நாம் அறிகிறோம். ஒரு இடதுசாரி என்ற அடிப்படையில் இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ரஸ்யாவும் சீனாவும் சோசலிச நாடுகள் எனக் கருதப்பட்ட போதிலும் அவை உண்மையான சோசலிச நாடுகள் அல்ல. அவை உண்மையில் அதிகாரிகளால் ஆளப்படும் நாடுகள். அவற்றை நாங்கள் பாட்டாளி வர்க்க அதிகாரிகளின் நாடு என அழைப்போம். அந்த நாடுகள் தமக்கு என தனியான நிகழ்ச்சித் திட்டத்தை மட்டுமன்றி தனித்துவமான பிரச்சினைகளையும் கூட கொண்டுள்ளன.

சீனாவைப் பொறுத்த வரை திபெத் மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றார்கள். அந்த உரிமையை சீனா மறுத்து வருகின்றது.

ரஸ்யாவிலும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற பெலாராஸ் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களுக்கு ரஸ்யா இன்னமும் சொந்தம் கொண்டாடி வருகின்றது.

அதேவேளையில் இந்திய ஆட்சியாளர்கள் ஏனைய மாநிலங்களில் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு தாம் வாழும் வடக்கு மாநிலங்களை அபிவிருத்தி செய்து வருவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்துப் பிராமணர்கள் அங்கு தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

காஸ்மீர் பிரச்சினையில் இந்தியா மோசமான தவறை இழைத்து வருகின்றது. சுதந்திர காஸ்மீர் நாட்டை மிகவும் தந்திரமான வகையில் தனது மாநிலமாக இந்தியா வைத்துக் கொண்டிருக்கின்றது. அங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மட்டும் போராடி வரவில்லை. அவர்கள் தமது பிரச்சினைகளுக்குமாகவே போராடி வருகின்றார்கள். இந்தியப் பூர்ஸ்வாக்கள் இந்நிலையில் தமிழர் போராட்டத்துக்கான ஆதரவை நிறுத்திக் கொண்டுள்ளார்கள்.

இன்று மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள உலக வல்லரசுகளும் கூட தமது பொருளாதார நலன்களுக்காக வடக்கு – கிழக்கு பிரச்சினையில் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றன.

அவர்கள் ஏற்கனவே தெற்கில் சந்தைகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் காரணமாக அவர்களால் வடக்கு – கிழக்கில் சந்தையைக் கைப்பற்ற முடியாமல் உள்ளது.

இயற்கை வளங்கள், அழகான இடங்கள் என்பவற்றை அவர்களால் அனுபவிக்க முடியாமல் உள்ளது. அங்கே சந்தை கூட மிகவும் சிறியது. மக்கள் யாவரும் கூட்டுப்பண்ணை போன்ற ஒரு முறையில் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள். பயிரிட்டு தேவையான மீன்களைப் பிடித்து பாரம்பரிய முறைப்படி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அங்கே செய்வதற்கு முதலாளித்துவத்தால் முடியாமல் உள்ளது.

அங்கு மட்டுமல்ல இந்தியாவின் சில பகுதிகள் ஆபிரிக்க என உள்நுழைய அவர்கள் முயற்சித்து வருகின்றார்கள். இந்நிலையில் அவர்கள் விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு உதவ வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் நடைபெறுகின்ற அனைத்துமே அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏன் புலிகள் போராடுகின்றார்கள். யார் அதற்குக் காரணம் என்பவை தொடா்பாக அவர்களுக்கு நன்கு தெரியும். சில வேளைகளில் எங்களைவிட அதிகமாக அவர்களுக்குத் தெரியக் கூடும்.

சீனா, ரஸ்யா இந்தியா யாவும் தமது நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றன. எந்த நாட்டில் விடுதலைப் போராட்டம் நடைபெற்றாலும் அவை ஆதரவு அளிக்கப் போவதில்லை. ஏனெனில் இது அவர்களுக்கும் உள்நாட்டில் பிரச்சினையைத் தரும்.

விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டால் அது அவர்களுக்கு நெருக்கடியைத் தரும். அவர்கள் நாடுகளில் அவை பிரதிபலிக்கும். அங்குள்ளவர்கள் மிகத் தீவிரமாகப் போராடத் தொடங்கிவிடுவார்கள். எனவே தான் அந்த நாடுகள் தமிழ் மக்களின் விடுதலையை எதிர்த்து வருகின்றன என்றார் ரணத் குமாரசிங்க.

Source & thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.