புலிகள் கனரக ஆயுதங்களால் தாக்குவதாலேயே பெருமளவான படையினருக்கு காயங்கள் ஏற்படுகின்றன: இராணுவ தளபதி பொன்சேகா

ஆட்லறி மற்றும் ஷெல் போன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதால் படைத்தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு காயங்கள் ஏற்படுகின்றன என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


வன்னியில் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குண்டுள்ள விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்கு ஊடுருவி தாக்குதல்கள் நடத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். தேசிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து வடக்கில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான போர் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் இப் போரின் வெற்றியை அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வடக்கில் படையினர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தே இந்த வெற்றியை அண்மித்துள்ளனர். தவிர இது தானாக வந்த வெற்றியல்ல. மோதல்களில் ஈடுபட்டு வரும் விடுதலைப்புலிகளுக்கு எவ்வகையிலோ ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

படையினருக்கு ஏற்பட்டுள்ள காயங்களில் பெரும்பாலானவை புலிகளால் நடத்தப்படும் கனரக ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். அவர்கள் எவ்வித ஆயுதங்களால் தாக்குதல்களை நடத்தினாலும் படையினரின் பயணம் நிறுத்தப்போவதில்லை.

எமது இராணுவத்தினர் உண்ணாமல் உறங்காமல் போரின் வெற்றிக்காக தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அதனை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அவர்கள் பலத்துடனேயே இந்த வெற்றியை நோக்கி பயணித்துள்ளனர்.

வன்னியில் தற்போது எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி பலத்த தாக்குதல்களை நடத்தவே முயற்சித்து வருகின்றனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.