ஐ.நா மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்: நவநீதம்பிள்ளை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை புதுடெல்லியில் சந்தித்த நவநீதம்பிள்ளை, இலங்கை நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதை மீண்டும் வலியுறுத்தப் போகிறேன் என்று தெரிவித்தார் நவநீதம்பிள்ளை.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல் சூழ்நிலை குறித்து சரியான மதிப்பீடுகளை மேற்கொள்ள கண்காணிப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீ்ர்வு காண முடியாது. அதை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்பதே ஐ.நா.மன்றத்தின் கருத்து என்று தெரிவித்த நவநீதம் பிள்ளை, சிவிலியன்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் குறித்து பல தடவைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அரசாங்கம் சாதகமான பதிலை இதுவரையில் அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.