நியூசிலாந்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கக் கோரி ‘உரிமைப்போர்’

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அனைத்துலகம் அங்கீகரிக்கக் கோரி நியூசிலாந்தில் ‘உரிமைப்போர்’ நடத்தப்பட்டுள்ளது.

ஒக்கிலாந்து நகரில் நேற்று சனிக்கிழமை (21.03.09) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெரும் திரளாக மக்கள் வந்து தங்கள் உரிமைக்கான குரலை வெளிப்படுத்தினர்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் எமது பாதுகாப்பு அரண்”

“எமக்குத் தேவை தமிழீழம்”

“பிரபாகரன்தான் எமது தலைவர்”

என்ற பல முழக்கங்களையிட்டவாறு மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இந்த உரிமைப்போரில் தாயகத்தில் உணவு – மருத்துவ வசதி இன்றி அல்லற்படும் மக்களின் அவலத்தையும் போரின் கொடுமைகளையும் சித்தரிக்கும் புகைப்படங்களையும் பதாகைகளையும் மக்கள் கொண்டு சென்றனர்.

“நியூசிலாந்தே எமக்கு உதவு”

“உலகமே எமக்குத் தேவை சமாதானம்”

எனவும் முழக்கமிட்டனர்.

இதில் கலந்து கொண்ட நியூசிலாந்து வாழ் தமிழ் மக்கள் முதன்முறையாக நியூசிலாந்தில் நூற்றுக்கும் அதிகமான தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த உரிமைப்போரில் நியூசிலாந்து வாழ் வேற்று இனத்தவர்களும் இணைந்து கொண்டு தங்கள் ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

பேரணியின் நிறைவில் நியூசிலாந்து தமிழ்ச் சங்கம் சார்பாக மருத்துவர் சிவா வசந்தன் உரையாற்றுகையில்,

“ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிங்கள அரசை உலுக்கியுள்ளது. அதனால், அனைத்து நாடுகளிலும் உள்ள சிங்களவர்களை எமது போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசு வற்புறுத்தி வருகின்றது. இதனை நாம் எம் கண்முன்னே காண்கின்றோம்.

எனவே, புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடைந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு பக்க பலமாக நின்று தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும்.

இந்திய அரசு ஏப்பிரல் 14 ஆம் நாளுக்கு முன் போரை முடிவிக்கு கொண்டு வரக்கேட்டுக்கொண்டதையடுத்து சிங்கள அரசு கொடூரமாக மேலும் பொதுமக்களை தாக்கி வருகின்றது.

இதனால், இன்னும் நாம் எமது போராட்டங்களை வலுப்பெறச்செய்து நியூசிலாந்து மற்றும் வெளிநாடுகளின் கவனத்தை ஈர்த்து தமிழீழமே எமக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும் என அவர்களை உணரச் செய்ய வேண்டும். புலம்பெயர் வாழ் தமிழரிலேயே எமது தமிழீழ விடுதலையின் வெற்றியும் பலமும் தங்கியுள்ளது” என்றார்.

இவரைத் தொடர்ந்து, மகளிர் அணி சார்பாகப் பேசிய திருமதி நர்மதா உரையாற்றுகையில்,

“தமிழர்கள் பலம்பெற்ற இராச்சியங்களைக்கொண்டு சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ்ந்த வரலாற்றைக்கொண்டவர்கள். அந்த வரலாற்றை மீளவும் பெறுவதற்கு எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெறவேண்டும்” என்றார்.

இந்த ‘உரிமைப்போர்’ தொடங்குவதற்கு முன்னர் நியூசிலாந்து வாழ் சிங்களவர்கள், நியூசிலாந்தின் ஒக்கிலாந்து நகரத்தின் பிரதான வீதிகளில் தமது வாகனங்களில் சிங்கக் கொடியையும் நியூசிலாந்து கொடியையும் இணைத்தவாறு வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.