கணவருக்காக வாதாடிய மனைவி; மகனுக்காக ஆஜரான தாய்

சென்னை: கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கணவனுக்காக, ஐகோர்ட்டில் மனைவியே ஆஜராகி வாதாடினார். பஸ் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மகனுக்காக, தாய் ஆஜரானார். இருவரது முயற்சியும் வெற்றி பெற்றது.நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனி; நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றுகிறார்.

இவரை, கடந்த நவம்பரில் கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். பழனியை ஜாமீனில் விடக் கோரி ஐகோர்ட்டில் அவரது மனைவி தெய்வானை மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சிவகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தால் வக்கீல் ஆஜராகவில்லை. எனவே, கோர்ட்டுக்கு தெய்வானை வந்து நீதிபதி முன் ஆஜரானார். கண்ணீர் மல்க காணப்பட்டார். நீதிபதியிடம் தமிழில் பேசினார். “எனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை. இன்னும் சில நாட்கள் சிறையில் இருந்தால் அவரது உடலைத் தான் வீட்டுக்கு கொண்டு போக முடியும். 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவரை ஜாமீனில் விட வேண்டும்’ என தெய்வானை கேட்டார். இந்த வழக்கு பற்றி அரசு வக்கீலிடம் நீதிபதி விசாரித்தார். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிந்தது. எனவே, பழனியை ஜாமீனில் விட நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார். ஜாமீன் கிடைத்த பின்னும், கண்ணீருடன் தெய்வானை நின்று கொண்டிருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தனசேகரன்; வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறார். சிவபுரத்தில் ஜனவரி மாதம் பஸ் ஒன்று எரிக்கப்பட்டது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனசேகரனை போலீசார் பிடித்துச் சென்றனர். அதன் பின், தனசேகரனின் தந்தை மரணமடைந்தார். இறுதிச் சடங்குக்கும் அவரால் வர முடியவில்லை.ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தனசேகரனின் தாயார் அருந்ததி, நீதிபதி சிவகுமார் முன் நேற்று ஆஜரானார். இச்சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் தொடர்பில்லை, அவனை ஜாமீனில் விட வேண்டும் என அழுதுகொண்டே கூறினார். இதையடுத்து, 5,000 ரூபாய் டிபாசிட் செய்ய உத்தரவிட்டு, தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி சிவகுமார்.

வாலிபரின் பரிதாப நிலை: குளிக்காமல், பல் துலக்காமல் அழுக்கு ஆடையுடன் தலைமை நீதிபதி முன் ஆஜராகி வழக்கு குறித்து முறையிட்டார் வாலிபர் ஒருவர். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). பள்ளி குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் வேலை. 6ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். ஜாதி சான்றிதழ் தொடர்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.மூன்று நாட்களாக இந்த வழக்கு, விசாரணைப் பட்டியலில் இருந்தது. திங்கள் கிழமை சென்னை வந்த பிரகாஷ், ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அன்று கோர்ட்டுக்கு வந்தார். ஆனால், அவரது வழக்கு விசாரணைக்கு எட்டவில்லை. மறுநாளும் கோர்ட்டுக்கு வந்தார். அன்றும் அதே கதி தான். ஓட்டல் அறையில் தங்குவதற்கு கையில் பணம் இல்லை. பஸ் நிலையத்திலேயே படுத்துள்ளார். இன்றாவது தனது வழக்கு விசாரணைக்கு எட்டுமா என கோர்ட்டுக்கு வந்தார். உடுத்தியிருந்த ஆடை, அழுக்கு படிந்திருந்தது. மாலை 4 மணி தாண்டியது.

இவரது வழக்கும் விசாரணைக்கு வந்தது. டென்ஷனாகியிருந்த பிரகாஷ், வழக்கு குறித்து நீதிபதிகளிடம் முறையிட்டார். ஜாதி சான்றிதழ் குறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு “முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.கோர்ட்டை விட்டு வெளியில் வந்த பிரகாஷிடம் கேட்டபோது, “குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை. அப்படியே வந்துவிட்டேன். கையில் இருந்த பணம் செலவாகி விட்டது. பஸ் நிலையத்தில் தான் படுத்திருந்தேன்’ என கூறியது உருக்கமாக இருந்தது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.