சர்வதேச அமைப்புக்களிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளனர்: கெஹலிய ரம்புக்வெல்ல

சர்வதேச நிறுவனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் ஊடுருவி இருக்கலாமென்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வடக்கில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி குறித்து ஆராயும்போது இச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித ஆணையானர் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு இணையத்தளங்களில் வெளியான தகவல்களும் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஒற்றுமை ஒன்றே தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச நிறுவனங்களில் ஊடுருவியுள்ளமைக்கு ஆதாரமாகக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதும் இந்த முயற்சியை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், சர்வதேச ரீதியில் ஐ.நா. அமைப்பின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.