மக்கள் பாதுகாப்பு வலயம் மீது படையினர் எறிகணை தாக்குதல்: 73 பொதுமக்கள் பலி;127 பேர் காயம்

வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவத்தினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 62 தமிழ் பொதுமக்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் மாத்தளன் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 127 பேரில், 20 பேர் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியான மாத்தளன் பகுதியில் சனிக்கிழமை இரவு இலங்கை இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதுமாத்தளனில் இயங்கி வந்த மருத்துவமனை காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் பன்டேஜ் துணி முடிவடைந்த நிலையில் படுக்கை விரிப்புகளை கிழித்து காயங்களுக்கு மருந்து கட்ட பாவிப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முக்கியமான மருந்துகள் இல்லாமையினால் சத்திர சிகிச்சை எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.