இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு இராணுவ உதவி செய்கிறது: வைகோவுக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்

சேலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று சேலம் வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
செய்தியாளர்களிடம் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம் என தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

’’இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் வேலையில் ராஜபக்ச அரசு இறங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசக்கூடாது என்றும் கூறியுள்ளன.

ஆனால் இந்திய அரசு இதுவரை ஏன் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம்.

பிரதமர் மன்மோகன் சிங், கடந்த அக்டோபர் 2 ம் தேதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், இலங்கையில் நடக்கும் பிரச்சினை உள்நாட்டு விவகாரம். இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு இராணுவ உதவி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ உதவிகள் மட்டுமின்றி, பண உதவியும் இந்திய அரசு செய்து வருகிறது’’ என்று கடிதமூலம் தெரிவித்திருந்தார்.இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.