கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு கடற்புலிகள் மீது தாக்குதல் என அறிவித்த சிறிலங்கா

வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையும் மாலையும் சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

புதுமாத்தளன் கடற்பரப்பில் நேற்று காலை 8:50 நிமிடமளவில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 28 வயதான அந்தோனிப்பிள்ளை கிப்சன் என்பவரின் படகு மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலையடுத்து அந்தோனிப்பிள்ளை கிப்சன் படகில் இருந்து குதித்து கரை திரும்பினார். ஆனால் படகு முற்றாக அழிந்து நாசமாகியுள்ளது.

இதேவேளை, புதுமாத்தளன் கடற்பரப்பில் தொழில் செய்து கொண்டிருந்த 33 வயதான எட்வேர்ட் ஜனட் மற்றும் 28 வயதான சந்தியாப்பிள்ளை யோசப் ஆகியோரின் படகு மீது சிறிலங்கா படையினர் நேற்று மாலை 4:40 நிமிடமளவில் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் குறித்த படகில் இருந்த இருவரும் கொல்லப்பட்டோ காணாமல் போய் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

அதேவேளை, புதுமாத்தளன் கடற்பரப்பில் படையினர் நேற்று நடத்திய குறித்த இரண்டு தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதல்கள் என சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.